Published : 14 Apr 2025 03:59 AM
Last Updated : 14 Apr 2025 03:59 AM
விசாகப்பட்டினம்: ஆந்திராவில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 2 பெண்கள் உட்பட 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் அனகாபல்லி மாவட்டத்துக்கு உட்பட்ட கொத்தவுட்ல மண்டலம் கைலாசபுரத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் நேற்று மதியம் 12.45 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஆலை முழுவதும் தீ மளமளவென பரவியதால் அங்கிருந்தபட்டாசுகள் சரமாரியாக வெடித்து சிதறின. தகவல் கிடைத்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதற்கிடையே, போலீஸார், மீட்பு குழுவினரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் 2 பெண்கள் உட்பட 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 7 பேர் நரசிபட்டினம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் பலரும் கிழக்கு கோதாவரி மாவட்டம் சமர்லகோட்டா கிராமத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் தொழிற்சாலை கட்டிடத்தின் சுற்றுச்சுவர் முழுவதும் இடிந்து விழுந்தது.
விசாரணைக்கு உத்தரவு: பட்டாசு ஆலை தீ விபத்து குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்குமாறு மாநில உள்துறை அமைச்சர் அனிதா, மாவட்ட ஆட்சியர் விஜயா கிருஷ்ணன் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளார்.
அமைச்சர், ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, விபத்து குறித்து கேட்டறிந்தார். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். கட்சி நிர்வாகிகள் தங்களால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT