Published : 14 Apr 2025 01:34 AM
Last Updated : 14 Apr 2025 01:34 AM
நாடு முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகள் ரூ.10 லட்சம் கோடியில் மேம்படுத்தப்படும். இதில் வடகிழக்கு மாநிலங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது: உலகத் தரத்துக்கு இணையாக இந்தியாவில் நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அடுத்த 2 ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள நெடுஞ்சாலை கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும். இதன்படி ரூ.10 லட்சம் கோடியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தில் வடகிழக்கு மாநிலங்கள், எல்லையோர பகுதிகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். வடகிழக்கு மாநிலங்களில் மட்டும் ரூ.3,73,484 கோடியில் 784 நெடுஞ்சாலை திட்டங்கள் மேற்கொள்ளப்படும்.
தற்போது தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு நெடுஞ்சாலை திட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அசாமில் ரூ.57,696 கோடியில் நெடுஞ்சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதேபோல பிஹாரில் ரூ.90,000 கோடி, மேற்குவங்கத்தில் ரூ.42,000 கோடி, ஒடிசாவில் ரூ.58,000 கோடி, ஜார்க்கண்டில் ரூ.53,000 கோடியில் நெடுஞ்சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன. அசாம் தவிர்த்து இதர வடகிழக்கு மாநிலங்களில் அடுத்த ஆண்டில் ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான நெடுஞ்சாலை திட்டப் பணிகள் தொடங்கப்படும்.
135 இருக்கை பேருந்து: மகாராஷ்டிராவின் நாக்பூரில் ரூ.170 கோடியில் அதிவிரைவு சாலை திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. புதிய அதிவிரைவு சாலையில் 135 இருக்கைகள் கொண்ட சிறப்பு மின்சார பேருந்துகள் இயக்கப்படும். இந்த மின்சார பேருந்துகளை 30 விநாடிகளில் சார்ஜ் செய்ய முடியும். இதன்மூலம் 40 கி.மீ. தொலைவு வரை பேருந்தை இயக்க முடியும். ஒவ்வொரு பேருந்து நிலையத்திலும் சார்ஜிங் நிலையங்கள் இருக்கும். அங்கு பேருந்துகள் நிற்கும்போது 30 விநாடிகளில் சார்ஜ் செய்யப்படும். இதன்மூலம் மின்சார பேருந்துகள் இடைவெளி இன்றி தொடர்ச்சியாக இயக்கப்படும். இந்த திட்டம் டெல்லி- ஜெய்ப்பூர் வழித்தடத்தில் அமல் செய்யப்படும். இதன்பிறகு நாடு முழுவதும் திட்டத்தை விரிவுபடுத்த முடிவு செய்து உள்ளோம். இவ்வாறு அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT