Published : 13 Apr 2025 03:28 PM
Last Updated : 13 Apr 2025 03:28 PM

வக்பு வன்முறை | மே.வங்கத்தில் 150 பேர் கைது - இந்துக்கள் வீட்டைவிட்டு வெளியேறுவதாக பாஜக குற்றச்சாட்டு

கொல்கத்தா: வக்பு சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டத்தைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தின் வடக்கு மாவட்டமான முர்ஷிதாபாத்தில் பதற்றம் நிலவி வருகிறது. இந்த வன்முறையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர், 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடுமுழுவதும் உள்ள வக்பு சொத்துக்களை நிர்வகிக்க முக்கிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு நாடாளுமன்றத்தில் வக்பு திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்தினை எதிர்த்து நாடுமுழுவதும் ஏற்பட்ட போராட்டங்களில் மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் நகரும் ஒன்று. அங்கு வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பின்பு நடந்த வக்பு சட்டத்துக்கு எதிரான போராட்டம் வன்முறையாக மாறியது. மாவட்டத்தில் சுதி, துலியன், சம்சர்கஞ்ச் மற்றும் ஜங்கிபூர் பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.

தற்போது நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், மக்கள் அதிகமாக கூடுவதைத் தடுக்க தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாநில போலீஸார் தெரிவித்துள்ளனர். இதனிடையே, அமைதியை நிலைநாட்ட மத்திய படைகளை நிலைநிறுத்துமாறு கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்றம் சனிக்கிழமை கூறும் போது, "நிலைமை மிகவும் மோசமாகவும், நிலையற்றதாகவும் உள்ளது. மக்களின் பாதுகாப்பு ஆபத்தில் இருக்கும் போது, அரசியலமைப்பு நீதிமன்றங்கள் மவுன பார்வையாளராக இருக்க முடியாது" என்று தெரிவித்திருந்தது.

இதனிடையே, அனைத்து பிரிவு மக்களும் அமைதி காக்க வேண்டும் என்று மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் வன்முறையில் ஈடுபடுபவர்கள் சமூகத்துக்கு தீங்கு விளைவிக்கிறார்கள் என்று தெரிவித்தார். சர்ச்சைக்குரிய சட்டத்தைக் கொண்டுவந்து மாநில அரசு இல்லை, மத்திய அரசுதான் என்று தெரிவித்த மம்தா, இந்தச் சட்டத்தை மாநில அரசு ஆதரிக்கவில்லை என்றும் அச்சட்டம் மாநிலத்தில் அமல்படுத்தப்படாது என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மேற்குவங்கத்தின் எதிர்க்கட்சித் தலைவரான பாஜகவின் சுவேந்து அதிகாரி சுமார் 400 இந்துக்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறும் நிலைக்கு நிர்பந்திக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "மேற்குவங்கத்தில் மதத்துன்புறுத்தல் நடப்பது உண்மையானது. திரிணமூல் காங்கிரஸின் திருப்தி படுத்தும் அரசியல் தீவிரவாத சக்திகளுக்கு தைரியத்தை தந்துள்ளது. இந்துக்கள் வேட்டையாடப்படுகிறார்கள். நமது மக்கள் தங்களின் சொந்த நிலத்தில் உயிருக்கு பயந்து ஓடுகிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

மாநில ஆளுநர் சி.வி. ஆனந்த் போஸ் மாநிலத்தின் தற்போதைய கலவரம் குறித்து கவலை தெரிவித்துள்ளார். மேலும் உயர்நீதிமன்றத்தின் உத்தரவினை வரவேற்றுள்ளார். அவர் கூறுகையில், "சரியான நேரத்தில் தலையீட்டு சரியான முடிவினை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

வக்பு சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சில போலீஸ் வாகனங்களின் மீது கற்களை வீசினர். போலீஸ் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. இதனிடையே எந்த குண்டர்களையும் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று மாநில அரசு போலீஸாரிடம் தெரிவித்துள்ளதாக டிஜிபி ராஜீவ் குமார் தெரிவித்தார்.

அடுத்த வருடம் மேற்குவங்கம் பேரவைத் தேர்தலை சந்திக்க இருக்கும் நிலையில், வக்பு சட்டத்துக்கு எதிரான இந்த வன்முறை முதல்வர் மம்தா பானர்ஜிக்கு பெரும் அரசியல் சவாலாக மாறியுள்ளது. ஏற்கனவே ஆசிரியர் நியமனத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக ஆசிரியர் நியமனங்களை உச்ச நீதிமன்றம் ரத்துசெய்துள்ள நிலையில், 26,000 ஆசிரியர்களின் போராட்டத்தினை மாநில அரசு எதிர்கொண்டு வரும் நிலையில், இந்த வன்முறை மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x