Published : 13 Apr 2025 06:07 AM
Last Updated : 13 Apr 2025 06:07 AM
புதுடெல்லி: மாநில ஆளுநர்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது குடியரசுத் தலைவர் 3 மாதங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த 8-ம் தேதி பிறப்பித்த தீர்ப்பில் காலக்கெடு விதித்து உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டதை எதிர்த்தும், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலவரம்பு நிர்ணயம் செய்ய கோரியும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் கடந்த 2023-ம் ஆண்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் அமர்வு கடந்த 8-ம் தேதி தீர்ப்பு வழங்கியது.
‘‘தமிழக அரசின் 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் அவற்றை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் பரிந்துரை செய்தது சட்ட விரோதம். அந்த 10 மசோதாக்களும் ஆளுநருக்கு அனுப்பப்பட்டபோதே சட்டமாகி அமலுக்கு வந்துவிட்டன என்று உச்ச நீதிமன்றத்தின் தனிப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி அறிவிக்கிறோம். தன்னிச்சையாக செயல்பட்டு அவற்றை தடை செய்வதற்கான ‘வீட்டோ’ அதிகாரமோ, நிறைவேற்ற விடாமல் தடுப்பதற்கான ‘பாக்கெட் வீட்டோ’ அதிகாரமோ ஆளுருக்கு கிடையாது. மாநில அமைச்சரவையின் ஆலோசனைப்படி நடக்க அவர் கடமைப்பட்டவர். மாநில அரசின் மசோதா குறித்து ஒரு மாதத்துக்குள் ஆளுநர் முடிவு எடுக்க வேண்டும்" என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, அனைத்து உயர் நீதிமன்றங்கள், அனைத்து மாநில ஆளுநர் அலுவலகங்களுக்கும் உச்ச நீதிமன்றத்தின் இந்த 415 பக்க தீர்ப்பு நகல் அனுப்பி வைக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் இணையதளத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் முழுமையான தீர்ப்பு விவரம் பதிவேற்றம் செய்யப்பட்டது. இதன்மூலம் தீர்ப்பில் இடம்பெற்றுள்ள மேலும் சில முக்கிய அம்சங்கள் தெரியவந்துள்ளன. அதன் விவரம்:
மாநில ஆளுநர்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் விவகாரத்தில் குடியரசுத் தலைவருக்கு ‘வீட்டோ’ அதிகாரமோ, ‘பாக்கெட் வீட்டோ’ அதிகாரமோ கிடையாது. மசோதா தொடர்பான குடியரசுத் தலைவரின் முடிவு நீதிமன்ற ஆய்வுக்கு உட்பட்டது. அரசியல் சாசன பிரிவு 201-ன்படி, ஒரு மாநில சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டால், அந்த மசோதா ஆளுநருக்கு அனுப்பப்பட வேண்டும். அதை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைக்கலாம். மாநில ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் குறித்து 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவு எடுக்க வேண்டும். ஒருவேளை தாமதம் ஏற்பட்டால், அதற்கான காரணத்தை தெளிவுபடுத்த வேண்டும்.
ஒரு மசோதாவை மறுஆய்வு செய்ய அல்லது திருத்தம் செய்ய கோரி சட்டப்பேரவைக்கு குடியரசுத் தலைவர் திருப்பி அனுப்பலாம். சட்டப்பேரவையில் அந்த மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும்போது, மசோதா குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட வேண்டும். மாநில அரசுகளின் மசோதாக்களை தொடர்ச்சியாக திருப்பி அனுப்ப கூடாது. மாநில அரசின் மசோதா, அரசியல் சாசனத்துக்கு எதிராக இருக்கும் பட்சத்தில், குடியரசுத் தலைவர் சட்ட ஆலோசனைகளை கேட்கலாம்.
அதேபோல, மசோதாக்கள் விவகாரத்தில் மாநில அரசுகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். குடியரசுத் தலைவரின் கேள்விகளுக்கு மாநில அரசுகள் உரிய பதில்கள், விளக்கங்களை அளிக்க வேண்டும். நாட்டின் முதல் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் காலத்தில் நிகழ்ந்த சம்பவத்தை சுட்டிக் காட்ட விரும்புகிறோம். இந்து சட்ட மசோதா விவகாரத்தில் அப்போதைய குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் பல்வேறு ஆட்சேபங்களை எழுப்பினார். இதுதொடர்பாக அன்றைய அட்டர்னி ஜெனரல் எம்.சி.சீதல்வாட்டின் ஆலோசனையை அவர் கோரினார். அப்போது தெளிவாக விளக்கம் அளித்த சீதல்வாட், ‘‘மத்திய அமைச்சரவையின் ஆலோசனைப்படியே குடியரசுத் தலைவர் செயல்பட வேண்டும். இதுதான் அரசியலமைப்பு சட்டத்தின் விதி’’ என்று உறுதிபட தெரிவித்தார். இதை குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத்தும் ஏற்றுக் கொண்டார். இதன்மூலம் பிரதமர் - குடியரசுத் தலைவர் இடையே ஏற்பட்ட பிரச்சினைக்கு சுமுக தீர்வு காணப்பட்டது.
அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்ற அனைவரும் உறுதியேற்று செயல்பட வேண்டும். குறிப்பாக, அரசின் உயர் பதவிகளை வகிப்பவர்கள் அரசியலமைப்பு சட்டத்தின்படிமட்டுமே நடக்க வேண்டும். மாநில அரசின் நல்ல நண்பராக, ஆலோசகராக, வழிகாட்டியாக ஆளுநர் செயல்பட வேண்டும். மக்களின் நலனை மட்டுமே முன்னிறுத்த வேண்டும். பதவியேற்கும்போது எடுத்த உறுதிமொழிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். மாநில மக்களின் நலனுக்காக ஆளுநரும், மாநில அரசும் இணக்கமாக செயல்பட வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து சட்ட நிபுணர்கள் கூறும்போது, ‘‘வழக்கு விசாரணையின்போது, மசோதா குறித்து முடிவெடுக்க ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு நிர்ணயம் செய்ய கூடாது என்று மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் வாதிட்டார். ஆனால், அவரது கருத்தை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நிராகரித்துள்ளனர். நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக, மசோதா குறித்து முடிவு எடுக்க கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது’’என்று தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT