Published : 12 Apr 2025 06:19 PM
Last Updated : 12 Apr 2025 06:19 PM

காங். தொடர்புடைய நேஷ்னல் ஹெரால்டு வழக்கில் சொத்துக்களை கையகப்படுத்த அமலாக்கத்துறை நோட்டீஸ்

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிட் (ஏஜேஎல்)-க்கு எதிரான பண மோசடி வழக்கில் முடக்கப்பட்ட ரூ.661 கோடி மதிப்புள்ள அசையாச் சொத்துக்களை பறிமுதல் செய்ய அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதுகுறித்து அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏஜேஎல்-க்கு சொந்தமான டெல்லியின் ஐஒடியில் உள்ள ஹெரால்ட் ஹவுஸ், மும்பையின் பாந்த்ரா பகுதியில் உள்ள வளாகம் மற்றும் லக்னோவின் பிஷேஸ்வர்நாத் சாலையில் உள்ள ஏஜேஎல் கட்டிடம் ஆகிய மூன்று இடங்களில் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் ஒட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நோட்டீஸில்,"டெல்லி மற்றும் லக்னோ வளாகங்களை காலி செய்யுமாறும், மும்பையில் உள்ள சொத்தின் வாடகையை அமலாக்கத்துறைக்கு மாற்றித்தர வேண்டும்" என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் பிரிவு 8 மற்றும் விதி 5(1)-ன் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, இது அமலாக்கத்துறையால் வழக்கில் இணைக்கப்பட்டு, (பிஎல்எம்ஏ-ன்) தீர்ப்பளிக்கும் அதிகாரத்தால் உறுதி செய்யப்பட்ட சொத்துக்களை கையப்படுத்துவதைப் பற்றி நோட்டீஸ் தெரிவிப்பதாக கூறப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இந்த அசையாச் சொத்துக்கள் கடந்த 2023, நவம்பரில் அமலாக்கத்துறையால் வழக்கில் இணைக்கப்பட்டவை.

நேஷனல் ஹெரால்டு வழக்கு: நேஷனல் ஹெரால்டு என்பது ஏஜேஎல்-ஆல் வெளியிடப்படுகிறது, இது யங் இந்தியன் பிரைவேட் லிமிட்டட் நிறுவனத்துக்குச் சொந்தமானது. இந்த யங் இந்தியன் நிறுவனத்தில், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, முக்கியத் தலைவர் ராகுல் காந்தி ஆகிய இருவருக்கும் பெரும்பான்மை பங்குகள் உள்ளன. அவர்கள் இருவரும் தலா 30 சதவீதம் பங்குகளை வைத்துள்ளனர்.

யங் இந்தியன் நிறுவனத்தின் சொத்துக்கள், ரூ.18 கோடி அளவுக்கு போலி நன்கொடைகள், ரூ.38 கோடி அளவுக்கு போலியாக வாடகை முன்பணம், மற்றும் ரூ.29 கோடிக்கு போலியான விளம்பரங்கள் பெறுவது போன்ற குற்றநடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x