Published : 12 Apr 2025 05:39 PM
Last Updated : 12 Apr 2025 05:39 PM
புதுடெல்லி: டெல்லி விமான நிலையத்தில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக 350க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகின.
நேற்று (வெள்ளிக்கிழமை) மாலையில் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் (IGIA) செயல்பாடுகள் பாதிக்கப்பட்டன. அதன் தாக்கம் காரணமாக, இன்றும் (சனிக்கிழமை) விமான நிலைய செயல்பாடுகள் பாதிக்கப்பட்டன.
"டெல்லி விமான நிலையத்தில் விமான நடவடிக்கைகள் மேம்பட்டு வருகின்றன; இருப்பினும், நேற்றிரவு வானிலை காரணமாக தற்போதும் ஒரு சில விமானங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தைக் குறைக்க களத்தில் உள்ள எங்கள் குழுக்கள், தொடர்புடைய அனைவருடனும் ஒன்றிணைந்து செயல்படுகிறார்கள்," என்று DialFlight எனும் விமான சேவை நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் இன்று மதியம் 2 மணிக்கு பதிவிட்டுள்ளது.
விமான கண்காணிப்பு வலைத்தளமான Flightradar24.com இல் கிடைக்கும் தரவுகளின்படி, 350க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகியுள்ளன. விமானப் புறப்பாடுகளுக்கான சராசரி தாமதம் 40 நிமிடங்களுக்கு மேல் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
"டெல்லியில் நிலவும் விமானப் போக்குவரத்து நெரிசல் காரணமாக விமானங்கள் புறப்படுதல் மற்றும் தரையிறங்குதல் அனுமதிக்காக நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதன் காரணமாக பல விமானங்கள் பாதிக்கப்படுகின்றன," என்று இண்டிகோ தனது எக்ஸ் பக்கத்தில் மதியம் 1.32 மணிக்கு தெரிவித்துள்ளது.
விமான நிலையத்தில் காத்திருக்கும் பயணிகள் பலர், விமான சேவை கால தாமதம் தொடர்பாக சமூக ஊடகங்களில் படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிர்ந்துள்ளனர்.
பராமரிப்பு பணிகளுக்காக ஒரு ஓடுபாதை மூடப்பட்டிருப்பதால், விமான நிலையத்தில் இப்போது மூன்று ஓடுபாதைகள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT