Published : 12 Apr 2025 07:31 AM
Last Updated : 12 Apr 2025 07:31 AM
திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தானம் பராமரிக்கும் கோசாலையில் கடந்த 3 மாதங்களில் நூற்றுக்கும் அதிகமான பசுமாடுகள் சரியான பராமரிப்பின்றி இறந்து விட்டதென திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் அறங்காவலர் கருணாகர் ரெட்டி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக தக்க ஆதாரங்களுடன் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. ஆனால், இதை திருப்பதி தேவஸ்தானம் மறுத்துள்ளது.
ஆந்திர மாநிலம், திருப்பதி-சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான கோசாலை உள்ளது. இங்கு ஏராளமான பசுக்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. பல பக்தர்கள் பசுக்களை இங்கு தானமாகவும் வழங்கி வருகின்றனர். இதை திருப்பதி தேவஸ்தானம் பராமரிக்கிறது.
இங்கு நூற்றுக்கணக்கில் பசுக்கள் பராமரிக்கப்ப்டடு வருகின்றன. இங்கிருந்துதான் தினமும் பால் கறக்கப்பட்டு திருமலை மற்றும் திருப்பதியில் கோயில்களுக்கு விநியோகமும் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏவும், முன்னாள் திருப்பதி தேவஸ்தான அறங்காவலருமான கருணாகர் ரெட்டி பேசிய ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதாவது, திருப்பதி கோசாலையில் கன்றுகள், பசுக்கள் சரிவர பராமரிக்கப்படாததால் கடந்த 3 மாதங்களில் மட்டும், நூற்றுக்கணக்கில் பசுக்கள் இறந்து விட்டதாக கருணாகர் ரெட்டி அந்த வீடியோவில் குற்றம் சாட்டி உள்ளார். மேலும் சமூக வலைதளங்களில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. ஆனால், இதை திருப்பதி தேவஸ்தானம் மறுத்துள்ளது. இது வேண்டுமென்றே பரப்பப்படும் குற்றச்சாட்டு என்றும், இதனை பக்தர்கள் நம்ப வேண்டாமெனவும் திருப்பதி தேவஸ்தானம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தற்போதைய தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினரும் பாஜக நிர்வாகியுமான பானுபிரகாஷ் ரெட்டி நேற்று மாலை திருப்பதியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இதுவேண்டுமென்றே கூறப்படும் குற்றச்சாட்டாகும். கருணாகர் ரெட்டி கூறுவது போல் நூற்றுக்கணக்கான பசுமாடுகள் இறக்கவில்லை. வாய் இல்லா ஜீவன்களை வைத்து அவர் அரசியல் செய்கிறார். பசுக்களை கூட பராமரிக்க காசு இல்லாத நிலையிலா திருப்பதி தேவஸ்தானம் உள்ளது? இதற்கு அரசியல் காழ்ப்புணர்வே காரணம். கருணாகர் ரெட்டி தற்போது வீட்டில் வேலை இல்லாமல் இருப்பதால் இதுபோன்ற பொய் கற்பனைகள் அவரது மூளையில் உதிக்கின்றன.
தேவைப்பட்டால் கருணாகர் ரெட்டி வருவதெனில், நானே அவரை கோசாலைக்கு நேரில் அழைத்து சென்று பசுக்கள் ஆரோக்கியமாக உள்ளது என்பதை நிரூபிக்கிறேன். இவ்வாறு பானுபிரகாஷ் ரெட்டி கூறினார். இந்த விவகாரம் ஆந்திராவில் தற்போது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT