Published : 12 Apr 2025 08:19 AM
Last Updated : 12 Apr 2025 08:19 AM
புதுடெல்லி: தமிழ்நாட்டின் நலனுக்கும், முன்னேற்றத்திற்கும், தமிழ்க் கலாச்சாரத்தின் தனித்துவத்தைப் பாதுகாப்பதற்கும் ஊழல் மலிந்த, பிரிவினைவாத திமுகவை விரைவாக வீழ்த்துவது முக்கியமானது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: வலுவாக இணைவோம், தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக ஒன்றுபடுவோம். தேசிய ஜனநாயகக் கூட்டணி என்ற குடும்பத்தில் அஇஅதிமுக இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இதர கூட்டாளிகளுடன் ஒன்றிணைந்து, நாம் தமிழ்நாட்டை முன்னேற்றத்தின் புதிய உச்சங்களுக்குக் கொண்டுசெல்வோம். மாநிலத்திற்கு அயராது பாடுபடுவோம்.
மாமனிதர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா அவர்களின் தொலைநோக்குப் பார்வையை செயல்படுத்தும் ஓர் அரசை நாம் உறுதிசெய்வோம். தமிழ்நாட்டின் நலனுக்கும், முன்னேற்றத்திற்கும், தமிழ்க் கலாச்சாரத்தின் தனித்துவத்தைப் பாதுகாப்பதற்கும் ஊழல் மலிந்த, பிரிவினைவாத திமுகவை விரைவாக வீழ்த்துவது முக்கியமானது. அதனை நமது கூட்டணி செய்து முடிக்கும். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலை அதிமுக - பாஜக இணைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி எதிர்கொள்ளும் என்றும், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த கூட்டணி தேர்தலை எதிர்கொள்ளும் என்றும் நேற்று சென்னை வந்த அமித் ஷா தெரிவித்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வரப்போகும் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று ஆட்சி அமைக்க இருக்கிறது. நாங்கள் இணைந்துதான் இங்கே ஆட்சி அமைக்கப் போகிறோம். கூட்டணி ஆட்சிதான் நடைபெற போகிறது. எடப்பாடி தலைமையில்தான் கூட்டணி இருக்கும். வெற்றி பெற்ற பிறகு மற்ற விஷயங்களை நாங்கள் சொல்கிறோம். இப்போது எவ்வித குழப்பத்தையும் திமுக ஏற்படுத்த நாங்கள் வாய்ப்பளிக்க மாட்டோம்.
கூட்டணி தொடர்பாக அதிமுக நிபந்தனை ஏதும் விதித்துள்ளதா என கேட்கிறீர்கள். அதிமுக எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. அதிமுக ஒன்றிணைய அழைப்பு விடுப்பீர்களா என கேட்கிறீர்கள். அதிமுகவின் உள்கட்சி விவகாரங்களில் நாங்கள் தலையிடப் போவதில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிமுக வருவது இருவருக்குமே வெற்றியைத் தரும். யார் யாருக்கு எத்தனை தொகுதிகள் என்பதும் வெற்றி பெற்ற பிறகு எவ்வாறு ஆட்சி அமைப்பது என்பதும் பிறகு பேசப்படும்” என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT