Published : 11 Apr 2025 07:22 PM
Last Updated : 11 Apr 2025 07:22 PM

6 நாள், 23 பேர், கூட்டுப் பாலியல் வன்கொடுமை: வாராணசியில் 19 வயது பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

வாராணசி: உத்தரப் பிரதேசம் வாராணசியில் 23 பேர் சேர்ந்து 19 வயது இளம்பெண் ஒருவரை 6 நாட்கள் போதைக்குள்ளாக்கி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரின்படி, மார்ச் 29-ம் தேதி முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரை இளம்பெண் ஒருவரை 23 ஆண்கள் பல்வேறு இடங்களில் வைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் இக்கொடூரம் குறித்து ஏப்.6-ம் தேதி போலீஸில் புகார் அளித்துள்ளனர்.

இந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார், பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 70(1) (கூட்டுப் பாலியல் வன்கொடுமை) 74 (பெண்ணின் மாண்பை குலைக்கும் வகையில் அவர் மீது தாக்குதல் நடத்துவது), 123 (குற்றம் செய்யும் நோக்கத்துடன் விஷம் போன்றவைகள் கொடுத்து காயப்படுத்துதல், 126(2) (தவறாக நடத்தல்) 127(2) (அடைத்துவைத்தல்), மற்றும் 351(2) (மிரட்டல்) போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனிடையே, பாலியல் வன்கொடுமை குற்றம்சாட்டப்பட்டுள்ள 23 பேரில் 12 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கன்டோமென்ட் கூடுதல் காவல் ஆணையர் விதுஷ் சக்சேனா கூறுகையில், "அந்த 19 வயது இளம்பெண் சில ஆண் நண்பர்களுடன் மார்ச் 29-ம் தேதி வெளியே சென்றுள்ளார். ஆனால், அவர் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் ஏப்.4-ம் தேதி அளித்த புகாரின்படி, அவர் காணாமல் போனதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. என்றாலும், அவர் மீட்கப்பட்டபோது கூட்டுப் பாலியல் வன்கொடுமை பற்றி ஏதுவும் கூறவில்லை. அப்பெண்ணின் குடும்பத்தினர் ஏப்.6-ம் தேதி அளித்த புகாரின்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவரின் தாயார் கொடுத்த புகாரின்படி, அப்பெண் மார்ச் 29-ம் தேதி தனது தோழியின் வீட்டுக்குச் சென்று திரும்பும் வழியில் ராஜ் விஸ்வகர்மா என்ற பையனைச் சந்தித்துள்ளார். அவர், அப்பெண்ணை லங்காவில் உள்ள தனது கஃபேவுக்கு அழைத்துச் சென்று, தனது பிற நண்பர்களுடன் தகாத செயலில் ஈடுபட்டுள்ளார். அதில் இருந்து ஏப்.3-ம் தேதி வரை பல்வேறு நபர்கள் அப்பெண்ணை பல்வேறு இடங்கள், ஹோட்டல்களுக்கு அழைத்துச் சென்று குளிர்பானத்தில் போதைப் பொருள் கலந்து கொடுத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

பல நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அந்தப் பெண், ஏப்.4-ம் தேதி வீட்டுக்கு வந்து தனக்கு நேர்ந்த கொடுமைகளை குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார்" என்று ஆணையர் தெரிவித்தார்.

கடுமையான நடவடிக்கைக்கு பிரதமர் உத்தரவு: பிரதமர் மோடியின் தொகுதியான வாராணசியில் 19 வயது பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை பற்றி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை விளக்கினர். அதற்கு பிரதமர் மோடி, குற்றவாளிகள் மீது முடிந்தவரை கடுமையான நடடிக்கை எடுக்கவும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x