Published : 09 Apr 2025 01:03 PM
Last Updated : 09 Apr 2025 01:03 PM

உணவு, இயற்கை உபாதைகளுக்கு இடைவேளை இல்லை: லோக்கோ பைலட்டுகளுக்கு ரயில்வே கெடுபிடி!

புதுடெல்லி: ரயில் ஓட்டுநர்களுக்கு உணவு உட்கொள்ளவும், இயற்கை உபாதைகள் நிமித்தமாகச் செல்லவும் இடைவேளை வழங்க சட்டமியற்றுவது செயல்பாட்டு ரீதியாக சாத்தியமில்லை என்று ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

பணியில் இருக்கும்போது உணவு உட்கொள்வதற்கும் கழிப்பறை செல்லவும் இடைவேளை வழங்க வேண்டும் என்று ரயில் ஓட்டுநர்கள் (லோகோ பைலட்டுகள்) நீண்டகாலமாக கோரி வருகின்றனர். ரயில் விபத்துக்கள் நிகழாமல் தடுக்க இதுவும் முக்கியம் என்று அவர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், ரயில் ஓட்டுநர்களின் இந்த கோரிக்கையை இந்திய ரயில்வே நிராகரித்துள்ளது.

ரயில் பணியாளர்களின் கோரிக்கைகள் மற்றும் ரயில் சேவையின் தரத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. ரயில்வே வாரியத்தின் ஐந்து நிர்வாக இயக்குநர்கள், ரயில்வேயின் ஆராய்ச்சிப் பிரிவான ஆராய்ச்சி வடிவமைப்புகள் மற்றும் தரநிலைகள் அமைப்பின் (RDSO) ஐந்து நிர்வாகக் குழுவினர் ஆகியோர் இதில் பங்குபெற்று, தங்கள் பரிந்துரைகளை ரயில்வே வாரியத்துக்கு வழங்கி உள்ளனர்.

இதையடுத்து, இந்த பரிந்துரைகள் அனைத்து மண்டல ரயில்வேக்களின் பொது மேலாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இந்த பரிந்துரைகளில் பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. முக்கியமாக, உணவு மற்றும் கழிப்பறை செல்வதற்கு இடைவேளை வழங்கி சட்டமியற்றுவது செயல்பாட்டு ரீதியாக சாத்தியமில்லை என்று அந்த பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், லோகோ கேபின்களில் பணிக்குழுவின் வாய்ஸ் மற்றும் வீடியோ ரெக்கார்டிங் சிஸ்டம் நிறுவப்படுவதை ரயில்வே ஆதரித்துள்ளது. இது தனியுரிமையை மீறுவதாக இல்லை என்றும், ஏதேனும் சம்பவம் நிகழ்ந்தால் அது குறித்து மேற்கொள்ளப்படும் ஆய்வு, பணியாளர்களுக்கு உதவுவதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

இது பணியாளர்களுக்கு எந்த கூடுதல் பணிச்சுமையையும் ஏற்படுத்தாது என்றும், இது செயல்பாட்டு செயல்திறனை மேம்படுத்துவதற்கும் ரயில்களின் பாதுகாப்பான இயக்கத்தை உறுதி செய்வதற்கும் உதவும் என்றும் ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

அதிவேக ரயில்கள் தற்போதுள்ள 110 கிமீ வேகத்தில் இருந்து 130 கிமீ வேகமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், 200 கிமீ அல்லது அதற்கு மேற்பட்ட தூரங்களுக்கு இயக்கப்படும் மெயின்லைன் எலக்ட்ரிக் மல்டிபிள் யூனிட் (MEMU) ரயில்களில் ஒரு உதவி லோகோ பைலட்டை நியமிக்கவும் குழு பரிந்துரைத்துள்ளது.

பலதரப்பட்ட குழுவின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்ட ரயில்வே வாரியத்தின் முடிவை அகில இந்திய லோகோ ரன்னிங் ஸ்டாஃப் அசோசியேஷன் கண்டித்துள்ளது.

இது தொடர்பாக AILRSA தலைமை நிர்வாக அதிகாரி, “ரயில்வே வாரியத்திற்கு எழுதிய கடிதத்தில், மணிக்கு 110 இலிருந்து 130 கிமீ ஆக வேகத்தை அதிகரித்தால் லோகோ பைலட்டுகளின் மன அழுத்த அளவு அதிகரிப்பதை மதிப்பிட குழு தவறிவிட்டது. லோகோ என்ஜின்களில் கழிப்பறை வசதி இல்லாமல், கழிப்பறை செல்ல இடைவேளையும் இல்லாமல் பணியாற்ற நிர்ப்பந்திப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

பல சூப்பர்ஃபாஸ்ட் ரயில்கள் சுமார் 6-7 மணி நேரம் நிற்காமல் ஓடுகின்றன. உதாரணமாக, புதுடெல்லி-சென்னை இடையேயான தமிழ்நாடு எக்ஸ்பிரஸை விஜயவாடாவில் இருந்து இயக்க இரவு 11.10 மணிக்கு ஒரு குழு பொறுப்பேற்கும். மறுநாள் காலை 6.35 மணிக்கு சென்னையை அடையும் வரை ரயிலை நிறுத்தாமல் இயக்க வேண்டும். லோகோ பைலட்டுகளின் நிலையை எண்ணிப் பார்க்க வேண்டும். குறிப்பாக, பெண் லோகோ பைலட்டுகளின் நிலை இன்னும் மோசமாக உள்ளது.

லோகோ கேபின்களில் உள்ள குழு குரல் மற்றும் வீடியோ பதிவு அமைப்பு, பணியாளர்களின் தனியுரிமையை மீறும் செயலே. லோகோ பைலட்டுகள் கொட்டாவி விடும் வீடியோவைக் காட்டி, பணியில் சேருவதற்கு முன்பு போதுமான ஓய்வு எடுக்காததே இதற்குக் காரணம் என குற்றம் சாட்டி தண்டிக்கவே இவை பெரும்பாலும் பயன்படுத்தப்படும்.” என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x