Published : 08 Apr 2025 05:45 PM
Last Updated : 08 Apr 2025 05:45 PM
திருவனந்தபுரம்: மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் நிறுத்திவைத்ததை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு கூட்டாட்சி அமைப்பை உறுதிப்படுத்தக் கூடியது என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள பினராயி விஜயன், "மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் நிறுத்திவைத்ததை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு கூட்டாட்சி அமைப்பையும், சட்டமன்றத்தின் ஜனநாயக உரிமைகளையும் நிலைநிறுத்துகிறது. அமைச்சரவையின் ஆலோசனையின்படி ஆளுநர்கள் செயல்பட வேண்டும் என்பதை உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே பலமுறை தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும், இந்த தீர்ப்பு மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது. சட்டமன்றத்தின் அதிகாரங்களை ஆளுநர்கள் அபகரிக்கும் போக்குக்கு எதிரான எச்சரிக்கையாகவும் இந்தத் தீர்ப்பு அமைகிறது. இது ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி. கேரள சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் 23 மாதங்கள் வரை கிடப்பில் போடப்பட்ட நிலையில் உள்ளன. இதற்கு எதிரான சட்டப் போராட்டத்தில் கேரளா ஈடுபட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு, கேரளா எழுப்பிய இதுபோன்ற பிரச்சினைகளின் பொருத்தத்தையும் முக்கியத்துவத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது" என்று தெரிவித்துள்ளார்.
கேரள சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு கேரள ஆளுநராக இருந்த ஆரிஃப் முகமது கான் அனுமதி வழங்க மறுத்ததால், இரு தரப்புக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது கவனிக்கத்தக்கது.
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்: சட்டப் பிரிவு 200-ன் கீழ், மசோதாக்கள் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பப்படும்போது அவருக்கு மூன்று வாய்ப்புகள் உள்ளன. ஒன்று அவர், ஒப்புதல் வழங்குவது, இரண்டாவது ஒப்புதலை நிறுத்தி வைப்பது மூன்றாவது குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்புவது.
முதல் முறையாக மசோதா அனுப்பப்படும்போது அந்த மசோதாவை நிறுத்தி வைக்க விரும்பினால், மசோதாவில் உள்ள அம்சங்களை மறுபரிசீலனை செய்ய அல்லது திருத்தங்களை மேற்கொள்ள பரிந்துரைக்கலாம். அல்லது, குடியரசு தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கலாம்.
சட்டப்பேரவை மீண்டும் மசோதாவை நிறைவேற்றி ஆளுநரிடம் சமர்ப்பித்தால், ஆளுநர் ஒப்புதலை நிறுத்தி வைக்க முடியாது. அவர் ஒப்புதலை வழங்க வேண்டும்.
அரசியலமைப்பில் ஆளுநருக்கு வீட்டோ (Veto) அதிகாரம் கிடையாது. மசோதாக்கள் மீது முடிவெடுப்பதில் தேவையற்ற தாமதம் கூடாது. இரண்டாவது முறையாக மசோதா அனுப்பப்படும்போது அதனை குடியரசுத் தலைவருக்கு பரிந்துறைக்கும் வாய்ப்பு ஆளுநருக்கு இல்லை. ஆளுநர் தனது ஒப்புதலை வழங்க வேண்டும் என்பது சட்டத்தில் தெளிவாக உள்ளது.
அந்த வகையில், குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக ஆளுநர் 10 மசோதாக்களை நிறுத்திவைத்தது சட்டவிரோதமானது, சட்டப்படி தவறானது. எடுக்கப்பட்ட தொடர் நடவடிக்கைகளும் சட்டவிரோதமானவை என்று நீதிமன்றம் கருதுகிறது.
10 மசோதாக்களை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக நிறுத்திவைத்த ஆளுநரின் நடவடிக்கை சட்டவிரோதமானது மற்றும் தன்னிச்சையானது, எனவே அந்த நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது. 10 மசோதாக்கள் சட்டமன்றத்தால் மறுபரிசீலனை செய்யப்பட்ட பிறகு அவை மீண்டும் ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்ட தேதியிலிருந்து அந்த மசோதா அங்கீகரிக்கப்பட்டதாகக் கருதப்படும்.
ஆளுநரின் ஒப்புதலுக்கான காலக்கெடு இல்லாத போதிலும், அவர் மசோதாக்களை காலவரையின்றி வைத்திருக்க முடியும் என்று அர்த்தமல்ல. அரசியலமைப்பில் நேரம் நிர்ணயிக்கப்படாத சந்தர்ப்பங்களில், முடிவு ஒரு நியாயமான காலத்திற்குள் எடுக்கப்பட வேண்டும் என்பதுதான் அர்த்தம்.
ஆளுநர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த உச்ச நீதிமன்றத்தின் சில கருத்துகள்:
> ஆளுநர்கள் நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு ஏற்ப விடாமுயற்சியுடன் செயல்பட வேண்டும்
> அரசியல் நோக்கங்களால் வழிநடத்தப்படாமல், ஒரு நண்பராகவும், வழிகாட்டியாகவும், தத்துவஞானியாகவும் தனது செயல்பாடுகளைச் செய்ய வேண்டும்
> ஆளுநர் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஒரு முன்னோடி. அவர் ஒரு ஊக்கியாக இருக்க வேண்டும், தடுப்பவராக இருக்கக்கூடாது.
> ஆளுநர்கள் அரசியலமைப்பின் மதிப்புகளைப் பாதுகாக்க வேண்டும்
> ஆளுநர்கள் தங்களது அரசியலமைப்பு பதவிப் பிரமாணத்தின்படி நடந்து கொள்ள வேண்டும்
> ஆளுநர்கள் தங்கள் நடவடிக்கைகள் மக்களின் அரசியலமைப்பு நெறிமுறைகள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப உள்ளதா என்பதை தங்களுக்குத் தாங்களே ஆய்வு செய்ய வேண்டும்.
ஆளுநர்களுக்கு காலக்கெடு: ஆளுநர்கள் மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான காலக்கெடுவை உச்ச நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.
அரசியலமைப்புச் சட்டத்தின் 200வது பிரிவின் கீழ், மசோதாக்கள் ஒப்புதலுக்காக ஆளுநர்களிடம் சமர்ப்பிக்கப்படும்போது, ஒப்புதலை நிறுத்தி வைத்தால், ஒரு மாதம். மாநில அமைச்சரவையின் ஆலோசனைக்கு மாறாக ஒப்புதலை நிறுத்தி வைத்தால், மூன்று மாதங்கள்.
மாநில அமைச்சரவையின் ஆலோசனைக்கு எதிராக குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு மசோதாக்கள் ஒதுக்கப்பட்டால், மூன்று மாதங்கள். ஆளுநர்களால் மறுபரிசீலனைக்காக சமர்ப்பிக்கப்படும் மசோதாக்கள் விஷயத்தில், ஒரு மாதம். இவை அதிகபட்ச காலக்கெடு. ஆளுநர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT