Published : 08 Apr 2025 04:31 PM
Last Updated : 08 Apr 2025 04:31 PM
பெங்களூரு: பாலியல் வன்கொடுமை குறித்த தனது கருத்து திரிக்கப்பட்டுவிட்டதாகவும், தனது பேச்சால் பெண்களுக்கு வேதனை ஏற்பட்டிருந்தால் அதற்காக தான் வருத்தம் தெரிவிப்பதாகவும் கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் பாரதி லே அவுட் பகுதியில் கடந்த 3-ம் தேதி அதிகாலை 2 பெண்கள் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவர்களை பின் தொடர்ந்து வந்த நபர் ஒருவர், ஒரு பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்த சிசிடிவி காட்சிகள் வைரலாகியதை அடுத்து, வீதியில் நடப்பதற்கும் பாதுகாப்பு இல்லாத நிலை பெங்களூருவில் ஏற்பட்டுள்ளதாக பலரும் கருத்துக்களை பதிவிட்டனர்.
இந்நிலையில் இது குறித்த நேற்று (ஏப். 7) செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்த உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா, "பெங்களூரு போன்ற ஒரு பெரிய நகரத்தில் இங்கும் அங்குமாக இதுபோன்ற சம்பவங்கள் நடக்கத்தான் செய்யும். சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ அந்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறி இருந்தார்.
அமைச்சர் பரமேஸ்வராவின் இந்த பதில், சர்ச்சையை ஏற்படுத்தியது. பாலியல் வன்கொடுமையை நியாயப்படுத்துவதுபோல அமைச்சரே பேசலாமா என பலரும் கேள்வி எழுப்பினர்.
இதனிடையே, அமைச்சரின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து தேசிம மகளிர் ஆணையம், கர்நாடக ஆளுநர் மற்றும் முதல்வருக்கு கடிதம் எழுதியது. இது தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “தேசிய மகளிர் ஆணையம தலைவர் விஜயா ரஹத்கரின் அறிவுறுத்தலின் பேரில், சமீபத்திய பெங்களூரு பாலியல் வன்கொடுமை வழக்கு குறித்து கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வராவின் பொறுப்பற்ற கருத்துக்களுக்கு ஆணையம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுபோன்ற அறிக்கைகள் பெண்களுக்கு எதிரான குற்றங்களை சகஜமாக்குகின்றன. உள்துறை அமைச்சர் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் சட்டம் ஒழுங்கை வலுப்படுத்த அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி கர்நாடக ஆளுநர் மற்றும் முதல்வருக்கு தேசிம மகளிர் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன் தொடர்ச்சியாக இன்று பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பரமேஸ்வரா, “நேற்று எனது கருத்தை நீங்கள் (ஊடகங்கள்) சரியாகப் புரிந்து கொள்ளவில்லை, மற்ற தளங்களும் அதை வித்தியாசமாகப் புரிந்து கொண்டன. நான் எப்போதும் பெண்கள் பாதுகாப்பை ஆதரிக்கிறேன். ஒரு உள்துறை அமைச்சராக, நிர்பயா திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை நான் செயல்படுத்தியுள்ளேன். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, நாங்கள் அதிக நிர்பயா நிதியைச் செலவிட்டு மத்திய அரசுடன் இணைந்து அதை செயல்படுத்தியுள்ளோம்.
சிலர் எனது கருத்தை திரித்து என்னைப் பற்றிப் பேசுவது சரியல்ல. சகோதரிகள் மற்றும் தாய்மார்களின் பாதுகாப்பிற்காக நான் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளேன். பெண்கள் பாதுகாப்பு குறித்து ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், துறையின் அதிகாரிகளை நான் பொறுப்பாக்கியுள்ளேன். எனவே எனது அறிக்கையை திரித்து கூறுவது சரியல்ல.
அரசியல் செய்யும் பாஜகவினருக்காக நான் இதைச் சொல்லவில்லை. எனது கருத்து, நமது சகோதரிகள், தாய்மார்கள் யாருக்காவது வேதனையை ஏற்படுத்தியிருந்தால் அதற்காக நான் வருத்தம் தெரிவிக்கிறேன். ஆனால் அதை வேறு விதமாக வெளிப்படுத்தி வெவ்வேறு தளங்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை.” என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT