Published : 07 Apr 2025 07:00 PM
Last Updated : 07 Apr 2025 07:00 PM

குஜராத்தில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் தேசிய மாநாடு - முக்கிய அம்சங்கள் என்னென்ன?

அகமதாபாத்: ஏப்ரல் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் குஜராத்தில் தேசிய மாநாட்டை காங்கிரஸ் கட்சி நடத்துகிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில், காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள், மாநிலத் தலைவர்கள், காங்கிரஸ் காரியக் குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என நாடு முழுவதிலுமிருந்து 3,000-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அமர்வு குஜராத்தில் கடைசியாக 1961-ம் ஆண்டு பாவ்நகரில் நடைபெற்றது. அதன் பிறகு 60 ஆண்டுகள் கழித்து மீண்டும் குஜராத்தில் நடைபெற இருக்கிறது. அதற்கு முன்னர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தலைமையில் சூரத் மாவட்டத்தில் 1938-இல் நடந்த ஹரிபுரா அமர்வில், முழுமையான சுயராஜ்யத்துக்கு அழைப்பு விடுக்கும் 'பூர்ண ஸ்வராஜ்' தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ள தேசிய மாநாடு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், "காங்கிரஸ் கட்சியின் மிகப் பெரிய ஆளுமைகளாக விளங்கிய மகாத்மா காந்தி மற்றும் வல்லபாய் படேல் ஆகிய இருவரும் குஜராத்தைச் சேர்ந்தவர்கள். மகாத்மா காந்தி காங்கிரஸ் தலைவராக இருந்ததன் 100-ம் ஆண்டை முன்னிட்டும், வல்லபாய் படேலின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டும் இம்முறை குஜராத்தில் மாநாடு நடத்தப்படுகிறது. இதன்மூலம், மறைந்த மாபெரும் தலைவர்களின் மரபுகளுக்கு காங்கிரஸ் மரியாதை செலுத்துகிறது.

மத்திய அரசு அரசியல் சாசனத்தின் மீது தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஜனநாயகத்தையும் நாடாளுமன்ற வழிமுறைகளையும் ஆட்சியாளர்கள் சீர்குலைத்துவிட்டார்கள். நாளையும் நாளை மறுநாளும் இது குறித்து நாங்கள் விவாதிக்க இருக்கிறோம். நியாயத்தின் பாதையில் எங்கள் பயணம் இருக்கும். நாட்டில் வேலைவாய்ப்பு இல்லை, விலைவாசி கடுமையாக உயர்ந்துவிட்டது. ஆனால், அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்தார். மத்திய அரசுக்கு நீதிக்கான பாதையைக் காட்ட, காங்கிரஸ் கட்சி இந்த தேசிய அளவிலான கூட்டத்தை நடத்துகிறது" என தெரிவித்தார்.

இரண்டு நாள் நிகழ்ச்சிகள் குறித்து தெரிவித்துள்ள குஜராத் காங்கிரஸ் கமிட்டியின் ஊடக ஒருங்கிணைப்பாளர் டாக்டர் மணீஷ் தோஷி, "ஏப்ரல் 8-ஆம் தேதி, கட்சியின் உச்ச கொள்கை வகுக்கும் அமைப்பான காங்கிரஸ் செயற்குழு (CWC), ஷாஹிபாக்கில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க சர்தார் ஸ்மாரக்கில் காலை 11.00 மணிக்கு கூடும். அன்றைய தினம் மாலை 5.00 மணிக்கு, மகாத்மா காந்தியின் சுதந்திர இயக்கத்தின் அடையாள மையமான சபர்மதி ஆசிரமத்தில் ஒரு புனித பிரார்த்தனைக் கூட்டத்திற்காக கட்சித் தலைவர்களும் பிரதிநிதிகளும் கூடுவார்கள். மாலை 7.45 மணிக்கு சபர்மதி ஆற்றங்கரையில் உள்ள ரிவர்ஃபிரண்ட் நிகழ்வு மையத்தில் ஒரு கலாச்சார நிகழ்ச்சி நடைபெறும். இதில், குஜராத்தின் பாரம்பரியமும் காங்கிரஸ் இயக்கத்திற்கான அதன் பங்களிப்பும் கொண்டாடப்படும்.

ஏப்ரல் 9-ஆம் தேதி சபர்மதி ஆற்றங்கரையில் நடைபெறும். இதில் நாடு முழுவதிலுமிருந்து 3,000 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள், மாநிலத் தலைவர்கள், காங்கிரஸ் காரியக் குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் உள்ளிட்ட முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொள்வார்கள்.

குஜராத் மீண்டும் ஒரு புதிய தொலைநோக்கு பார்வையை நாட்டிற்கு வழங்குவதற்கான ஒரு வாய்ப்பு இது. ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. குஜராத் மக்கள் உற்சாகமாக உள்ளனர். இந்த மாநாடு மாநிலத்திற்கும் தேசிய அளவில் காங்கிரசுக்கும் ஒரு புதிய திசையை அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது," என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x