Published : 07 Apr 2025 11:50 AM
Last Updated : 07 Apr 2025 11:50 AM

வக்பு சட்டம் தொடர்பாக அமளி: ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை ஒத்திவைப்பு

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் அமளி ஏற்பட்ட காட்சி

ஜம்மு: வக்பு சட்டம் தொடர்பாக விவாதிக்க கேள்வி நேரத்தை ஒத்திவைக்க சபாநாயகர் மறுத்ததை அடுத்து, ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டதால், பட்ஜெட் கூட்டத் தொடரில் முதன்முறையாக அவை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.

வக்பு திருத்த மசோதா கடந்த வாரம் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்ததை அடுத்து மசோதா சட்டமாகி இருக்கிறது.

இந்நிலையில், வக்பு சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றிய ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சி, சட்டப்பேரவையில் இன்று அது குறித்து விவாதிக்க கேள்வி நேரத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று நோட்டீஸ் அளித்தது. இதற்காக தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ் மற்றும் சில சுயேச்சை உறுப்பினர்கள் என ஒன்பது உறுப்பினர்கள் சபாநாயகர் அப்துல் ரஹீம் ராதரிடம் நோட்டீஸ் அளித்தனர்.

எனினும், உறுப்பினர்களின் கோரிக்கையை சபாநாயகர் ஏற்க மறுத்துவிட்டார். உறுப்பினர்களின் நோட்டீஸூக்கு பதில் அளித்த சபாநாயகர் சபாநாயகர் அப்துல் ரஹீம் ராதர், “விதி 56 மற்றும் விதி 58 துணை விதி 7-ன் படி நீதிமன்ற விசாரணையில் உள்ள எந்த ஒரு விஷயம் குறித்தும் விவாதிக்க அவையை ஒத்திவைக்க முடியாது. இந்த பிரச்சினை உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது. அதன் நகல் என்னிடம் இருக்கிறது. எனவே, ஒத்திவைப்பு தீர்மானம் மூலம் விவாதிக்க முடியாது என்று விதி தெளிவாகக் கூறுகிறது.” என தெரிவித்தார்.

சபாநாயகரின் விளக்கத்தை ஏற்க மறுத்த உறுப்பினர்கள், தாள்களை கிழித்தெறிந்து அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அவையை 15 நிமிடம் ஒத்திவைப்பதாக சபாநாயர் அப்துல் ரஹீம் ராதர் அறிவித்தார். பட்ஜெட் கூட்டத்தொடரின் போது அவை ஒத்திவைக்கப்படுவது இதுவே முதல் முறை.

இந்த விவகாரம் குறித்துப் பேசிய தேசிய மாநாட்டுக் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் தன்வீர் சாதிக், “இது எங்கள் ஜனநாயக உரிமை. ஜம்மு காஷ்மீர் முஸ்லிம் பெரும்பான்மை மாநிலம், இந்தப் பிரச்சினையைப் பற்றி விவாதிப்பது சட்டமன்ற உறுப்பினர்களின் உரிமை. நாங்கள் ஒரு ஒத்திவைப்பு தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளோம், அதில் 10-11 சட்டமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். நானும் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளேன், சபாநாயகர் அதை ஏற்றுக்கொண்டு இந்தப் பிரச்சினையைப் பற்றி விவாதிக்க எங்களுக்கு நேரம் ஒதுக்குவார் என்று நம்புகிறேன்.” என்று தெரிவித்தார்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ இர்ஃபான் ஹபீஸ் லோன் கூறுகையில், “இது அரசியலமைப்பு, ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சியை மீறுவதாகும். ஜனநாயகத்தில் எண்ணிக்கை ஒரு பொருட்டல்ல. அவர்கள் எங்களை நம்பிக்கையுடன் ஏற்றுக்கொண்டு, எங்கள் உணர்ச்சிகளை மதித்திருக்க வேண்டும். நீங்கள் சட்டத்தின் ஆட்சி, கூட்டாட்சி மற்றும் மதச்சார்பின்மையை வெட்கமின்றி மீறுகிறீர்கள். இது மிகவும் கவலைக்குரிய விஷயம். இந்தியா அத்தகைய சித்தாந்தத்திலிருந்து விடுபட வேண்டும் என்று நாங்கள் போராடுவோம்...” என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x