Published : 07 Apr 2025 05:03 AM
Last Updated : 07 Apr 2025 05:03 AM
மும்பை: ஓமனுக்கு அருகே மீன்பிடி படகில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட பாகிஸ்தான் மீனவர் ஒருவருக்கு இந்திய கடற்படை ஓடோடிச் சென்று அவரச மருத்துவ உதவியை வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து இந்திய கடற்படை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
ஓமன் கடற்கரைக்கு கிழக்கே சுமார் 350 கடல் மைல் தொலைவில் ஈரானிய படகு ஒன்று பாதிப்பில் உள்ளதாக தகவல் கிடைத்தது. படகின் குழுவினர் இயந்திரத்தில் வேலை செய்தபோது ஒருவருக்கு விரல்களில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும், அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், ஈரானுக்கு செல்லும் வழியில் அவர் மற்றொரு படகுக்கு மாற்றப்பட்டதாகவும் ஏப்ரல் 4-ம் தேதியன்று காலை தகவல் கிடைத்தது.
இதையடுத்து, ஐஎன்எஸ் திரிகண்ட் போர்க்கப்பல் உடனடியாக அங்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த மீன்பிடி படகில் 11 பாகிஸ்தானியர்கள், 5 ஈரானியர்கள் இருந்தனர். காயமடைந்த நபர் பாகிஸ்தானை (பலூச்) சேர்ந்தவர். பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்ட அவருக்கு அதிக ரத்தபோக்கு காணப்பட்டது. இதையடுத்து, திரிகண்ட் கப்பலில் இருந்த மருத்துவ அதிகாரி மார்கோஸ், அடிபட்ட பாகிஸ்தானியருக்கு மயக்கமருந்து வழங்கி விரல்களில் தையல் போட்டார்.
இந்த சிகிச்சை மூன்று மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. சரியான நேரத்தில் ரத்தபோக்கு கட்டுப்படுத்தப்பட்டு, அதன் மூலம் விரல்களின் இழப்பு தடுக்கப்பட்டது. மேலும், ஈரானை அடையும் வரை அவருக்கு தேவையான மருத்துவ பொருட்களும் வழங்கப்பட்டன. சரியான நேரத்தில் மருத்துவ உதவிகளை வழங்கியதற்காக படகில் இருந்த குழுவினர் இந்திய கடற்படைக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர். இவ்வாறு இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT