Published : 06 Apr 2025 06:46 AM
Last Updated : 06 Apr 2025 06:46 AM
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மருக்கு 442 மெட்ரிக் டன் உணவுப் பொருட்களை இந்தியா வழங்கியுள்ளது.
மியான்மர் நாட்டில் கடந்த மார்ச் 28-ம் தேதி சகாய்ங் நகரின் வடமேற்கே 16 கி.மீ. தொலைவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 7.7 புள்ளியாகப் பதிவானதைத் தொடர்ந்து, மீண்டும் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இரு நிலநடுக்கங்கள் தொடர்ந்து ஏற்பட்டதால் மியான்மரில் பல நகரங்கள் பெரும் பாதிப்புகளைச் சந்தித்துள்ளன. 3 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பெரும்பாலான நகரங்களில் பேரழிவு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அங்கு மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்கு உதவ இந்தியா சார்பில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவை (என்டிஆர்எஃப்) வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். முன்னதாக, இந்தியா சார்பில் மியான்மர் நாட்டின் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ சுமார் 100 டன் அளவிலான நிவாரணப் பொருள்கள் அனுப்பப்பட்டது.
இந்நிலையில், மியான்மருக்கு மனிதாபிமான அடிப்படையில் நிவாரண உதவிகளை வழங்க குவாட் நாடுகளான இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகள் சேர்ந்து 20 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவியைத் தர முன்வந்துள்ளன.
இதனிடையே, நேற்று இந்தியா சார்பில் 442 மெட்ரிக் டன் எடையுடைய உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. யாங்கூன் நகரின் தெற்கு கடலோரப் பகுதியில் அமைந்துள்ள திலவா துறைமுகத்தில் இந்த உணவுப் பொருட்கள், யாங்கூன் மாகாண முதல்வரிடம் வழங்கப்பட்டது. இதுதொடர்பான தகவல் யாங்கூனில் உள்ள இந்தியத் தூதரகத்தின் எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT