Published : 06 Apr 2025 06:25 AM
Last Updated : 06 Apr 2025 06:25 AM
புதுடெல்லி: பாஜக ஆளும் மத்திய பிரதேச மாநிலம் கன்ஞ் மாவட்டத்தின் சத்தர்பூரில் உள்ளது கதா கிராமம். இங்கு பிரசித்தி பெற்ற ‘பாகேஷ்வர் தாம்’ எனும் அனுமர் கோயில் உள்ளது.
இதன் தலைமை அர்ச்சகர் தீரேந்திர கிருஷ்ண சாஸ்திரி, பாகேஷ்வர் தாம் ஜன்சேவா சமிதி என்ற சமூக நல அமைப்பின் தலைவராகவும் உள்ளார். இந்த அமைப்பின் சார்பில் கோயிலுக்கு அருகில் உள்ள பரந்த பகுதியில் ஒரு இந்து கிராமத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் பூமி பூஜை செய்து கட்டிட வேலைகளையும் தொடங்கி வைத்துள்ளார்.
இந்தியாவின் முதல் இந்து கிராமமாக இது அடுத்த 2 ஆண்டுகளில் அமைக்கப்பட உள்ளது. சனாதனத்தை பின்பற்றாதவர்கள் இந்த கிராமத்தில் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள். இது குறித்து தீரேந்தர் சாஸ்திரி கூறும்போது, ‘‘இந்து தேசத்தின் கனவு ஓர் இந்து வீட்டில் இருந்து தொடங்குகிறது. ஒரு இந்து வீடு, இந்து கிராமம், இந்து மாவட்டம், இந்து மாநிலம் மற்றும் இந்து அரசு ஆகியவற்றைக் கொண்ட பின்னரே, இந்து தேசம் எனும் கனவு நிறைவேறும். நான் அமைக்கும் இந்த கிராமம், 1,000 இந்து குடும்பங்கள் வசிக்கும் வகையில் தயாராகிறது. இந்து மதம் மற்றும் சனாதன தர்மத்தைப் பின்பற்றுபவர்களுக்கு இக்கிராமத்தில் நிலம் வழங்குகிறோம். இதற்காக சமிதியால் இலவசமாக வழங்கப்படும் நிலத்தை மற்றவர்கள் வாங்கவோ, விற்கவோ முடியாது. இக்கிராமத்தில் இந்துக்கள் அல்லாதவர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. சனாதனத்தில் நம்பிக்கை கொண்டிருந்தால் கிராமத்துக்குள் வரலாம்’’ என்றார்.
முன்னதாக, ஒரு வீடியோ வெளியிட்ட தீரேந்தர் சாஸ்திரி, ‘‘இந்து கிராமம் உருவாக்குவதற்கு முன்பாக, ஒவ்வொரு வீட்டிலும் கிராமத்திலும் தீவிர இந்துக்களை உருவாக்கும் பணி தொடங்கும். இதற்கான பிரச்சாரம் இந்த மாதம் தொடங்குகிறது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT