Published : 06 Apr 2025 06:00 AM
Last Updated : 06 Apr 2025 06:00 AM
‘‘சொத்துக்களை கணக்கு காட்டும் பொறுப்பு, வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை வக்பு சட்ட திருத்த மசோதா கொண்டு வரும். இதனால் மசூதிகளுக்கோ, நினைவிடங்களுக்கோ பாதிப்பு இருக்காது’’ என பாஜக எம்.பி.யும், முன்னாள் சட்ட அமைச்சருமான ரவி சங்கர் பிரசாத் கூறினார்.
வக்பு திருத்த மசோதா நீண்ட விவாதத்துக்குப்பின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இது குறித்து ரவி சங்கர் பிரசாத் கூறியதாவது:
வக்பு சட்ட திருத்த மசோதா நிறைவேறியுள்ளதால், முஸ்லிம் பெண்கள் பயனடைவர். இந்த மசோதா சொத்துக்களை கணக்கு காட்டும் பொறுப்பு, வெளிப்படைத்தன்மையை கொண்டு வரும். எந்த மசூதி மற்றும் நினைவிடத்துக்கும் பாதிப்பு ஏற்படாது. வக்பு வாரியத்துக்கு சொத்துக்களை தானமாக அளித்தவரின் எண்ணம் நிறைவேறுகிறதா என்பதுதான் கேள்வி. வக்பு வாரியம் மத அமைப்பு அல்ல. அது சட்ட ரீதியான அமைப்பு. இதில் மேலாளராகவும், கண்காணிப்பாளராகவும் பணியாற்றும் நபருக்கு (முட்டாவாலி) சொத்துக்கள் மீது எந்த உரிமையும் இல்லை. வக்பு வாரிய சொத்துக்கள் எல்லாம் அல்லாவுக்கு உரியது. வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா முஸ்லிம் மதத்தில் உள்ள பின்தங்கியவர்கள் மற்றும் விதவைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
பிஹார் தலைநகர் பாட்னாவில் தக் பங்களாவுக்கு அருகேயுள்ள பகுதியில், வக்பு வாரியத்துக்கு சொந்தமான இடத்தில் 5 நட்சத்திர விடுதிகள், ஷோரூம்கள் உள்ளன. இந்தியாவில் உள்ள வக்பு வாரிய சொத்துக்கள் உலகிலேயே அதிகம். ஆனால் இங்கு மருத்துவமனைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பயிற்சி மையங்கள் எத்தனை கட்டப்பட்டுள்ளன? வக்பு வாரியத்துக்கு சொத்துக்களை அளித்தவர்களின் நோக்கம் நிறைவேறும் வகையில் அதன் மேலாளர் செயல்படுகிறாரா? அல்லது அவர் பாக்கெட்டை நிரப்பிக் கொள்கிறாரா? என்பதுதான் கேள்வி.
இந்த மசோதா குறித்து நாடகம் நடத்தப்படுகிறது. நாட்டு மக்கள் இந்த மசோதாவை பாராட்டப்போகின்றனர். வக்பு வாரிய சொத்துக்கள் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்பதை அறிந்து மக்கள் அதிர்ச்சியடைந்தனர். வக்பு சட்ட திருத்த மசோதா, வக்பு வாரியங்களில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தும். சொத்துக்கள் எல்லாம் கணக்கு காட்டப்படும். அனைத்து விவரங்களும் ஆன்லைனில் வெளியாகும். சொத்து ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கப்படும். வக்பு வாரியத்துக்கு சொந்தமாக எங்கு, என்ன சொத்துக்கள் உள்ளது என்பதை அனைவரும் விவரமாக அறிய முடியும்.
இந்த மசோதா நிறைவற்றத்தால், பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக- ஐக்கிய ஜனதா தள கூட்டணிக்கு பாதிப்பு ஏற்படாது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராகவும் போராட்டங்கள் நடந்தன. ஆனால் முஸ்லிம் ஒருவரின் குடியுரிமை கூட பறிக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT