Published : 05 Apr 2025 07:36 PM
Last Updated : 05 Apr 2025 07:36 PM
பெங்களூரு: மதசார்பாற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு ஒன்றில், சிறப்பு புலனாய்வு குழு தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கையில், அவர் பெண்ணை அடைத்து வைத்து, பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி, அதை வீடியோ எடுத்து மிரட்டியது உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரஜ்வலின் வீட்டில் வேலை செய்த பணிப்பெண் கொடுத்த புகார் தொடர்பான வழக்கில் இந்தக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பணிப்பெண், பிரஜ்வல் ரேவண்ணா குடும்பத்துக்குச் சொந்தமான ஹேலேநரசிபுராவில் உள்ள பண்ணை வீட்டில் பணிபுரிந்து வந்துள்ளார். அவர் பிரஜ்வல் ரேவண்ணா தன்னை பல முறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகவும், முதல் தாக்குதல் கடந்த 2021-ம் ஆண்டு நடந்தது என்றும் குற்றம்சாட்டியிருந்தார். அவரின் குற்றசாட்டின்படி, கரோனா ஊரடங்கின்போது, ஹேலேநரசிபுராவில் பண்ணை வீடு, பெங்களூருவில் உள்ள வீடு என பல இடங்களில் பாலியல் வன்கொடுமை தொடர்ந்ததாக கூறியிருந்தார்
குற்றச்சாட்டு உறுதி: இந்தப் புகார் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கையில், முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா, பாதிக்கப்பட்ட பெண்ணை கட்டாயப்படுத்தி அடைத்து வைத்து, பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி, அதனை வீடியோ எடுத்து, தாக்குதல் குறித்து வெளியே கூறினால் பயங்கரமான பின்விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என மிரட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், அந்த வீடியோக்களைக் காட்டி பிரஜ்வல் ரேவண்ணா மிரட்டியதால், பயம் காரணமாக அந்தப் பெண் தொடக்கத்தில் மவுனமாக இருந்துள்ளார். இணையத்தில் இந்த வீடியோக்கள் பரப்பப்பட்டதைத் தொடர்ந்து, தனக்கு நடந்த கொடுமைகளை வெளியே சொல்ல முடிவெடுத்து அதிகாரிகளை அணுகியுள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது.
பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள்: பிரஜ்வல் ரேவண்ணா தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார். தொடர்ந்து 10 மாதங்ளுக்கும் மேலாக அவரின் ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு வருகின்றன. பிரஜ்வல் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் தீவிரமான பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதேபோல் அங்கீகரிக்கப்படாத விஷயங்களைப் படம்பிடித்து பரப்பிய குற்றத்துக்காக தனியுரிமை மீறல் தொடர்பாக தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2008-ன் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, விசாரணை நீதிமன்றம் பிரஜ்வல் ரேவண்ணா மீதான வழக்கை ஏப்.9-ம் தேதி பட்டியலிட்டுள்ளது. தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகை அவரது வீட்டில் வேலை செய்ய பணிப்பெண் கொடுத்த புகார் அடிப்படையிலானது. இது பிரஜ்வல் மீதான பல பாலியல் வன்கொடுமை வழக்குகளில் ஒன்றாகும்.
கடந்த ஆண்டு (2024) ஏப்ரல் முதல் ஜுன் வரையிலான மாதங்களில், பிரஜ்வலுக்கு எதிராக ஹேலேநரசிபுரா காவல் நிலையத்தில் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கூடுதலாக பெங்களூரு சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் இரண்டு வழக்குகள் பதியப்பட்டன. அதேபோல், பிரஜ்வல்லின் தந்தை ஹெச்.டி.ரேவண்ணா மீதும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT