Published : 05 Apr 2025 06:50 PM
Last Updated : 05 Apr 2025 06:50 PM
புதுடெல்லி: இந்தியாவில் உள்ள வக்பு நிலங்களின் அளவோடு கத்தோலிக்க சர்ச்களுக்கு சொந்தமான நிலங்களை ஒப்பிட்டு ஆர்எஸ்எஸ் சார்பு பத்திரிகையான ஆர்கனைசர் கட்டுரை வெளியிட்டிருந்தது. ராகுல் காந்தியால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட அந்தக் கட்டுரை இப்போது நீக்கப்பட்டுள்ளது.
ஆர்எஸ்எஸ் சார்பு ஆங்கில பத்திரிகையான ஆர்கனைசரின் டிஜிட்டல் தளத்தில் ஒரு கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது. ‘இந்தியாவில் யாருக்கு அதிக நிலம் உள்ளது? கத்தோலிக்க திருச்சபைகள் Vs வக்பு வாரியம் விவாதம்’ என்ற தலைப்பிலான அந்தக் கட்டுரையில், "பல ஆண்டுகளாக, வக்பு வாரியம்தான் இந்தியாவில் அரசுக்கு அடுத்து இரண்டாவது பெரிய நில உரிமையாளர் என்ற பொதுவான நம்பிக்கை உள்ளது. இருப்பினும், இந்த கூற்று நாட்டின் நில உரிமை குறித்த உண்மையான தரவுகளுடன் ஒத்துப்போகவில்லை.
இந்திய கத்தோலிக்க திருச்சபை, நாடு முழுவதும் பரந்த நிலங்களைக் கொண்ட மிகப் பெரிய அரசு சாரா நில உரிமையாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இதனை அரசாங்க நில தகவல் வலைத்தள தரவுகள் உறுதிப்படுத்துகின்றன.
இந்திய கத்தோலிக்க திருச்சபைகளுக்குச் சொந்தமாக 7 கோடி ஹெக்டேர்களுக்கும் அதிகமாக நிலம் உள்ளது. கத்தோலிக்க திருச்சபை சொத்துகளின் மொத்த மதிப்பு சுமார் ரூ.20,000 கோடி. இது வக்பு வாரியத்தை விட அதிகம். இந்தியாவின் ரியல் எஸ்டேட் நிலப்பரப்பில் சர்ச் ஒரு குறிப்பிடத்தக்க பங்களிப்பாளராக மாறியுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆர்கனைசரில் வெளியான இந்தக் கட்டுரையை சுட்டிக்காட்டி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்திருந்தார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "வக்பு மசோதா தற்போது முஸ்லிம்களைத் தாக்குகிறது, ஆனால் எதிர்காலத்தில் மற்ற சமூகங்களை குறிவைப்பதற்கு ஒரு முன்னுதாரணத்தை அமைக்கிறது என்று நான் கூறியிருந்தேன். ஆர்.எஸ்.எஸ், கிறிஸ்தவர்கள் மீது கவனம் செலுத்த அதிக நேரம் எடுக்கவில்லை. அரசியலமைப்புச் சட்டம் மட்டுமே நமது மக்களை இதுபோன்ற தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கும் ஒரே கேடயம் - அதைப் பாதுகாப்பது நமது கூட்டுக் கடமை" என்று தெரிவித்திருந்தார்.
இதனிடையே, கட்டுரை சார்ந்த சர்ச்சைக்கு பதிலளித்த பத்திரிகையின் ஆசிரியர் பிரஃபுல் கெட்கர், “வக்பு மசோதா மீதான நிலைப்பாடு காரணமாக காங்கிரஸிலிருந்து கிறிஸ்தவர்கள் வெளியேறுகின்றனர். மசோதாவுக்கு எதிராக வாக்களிக்காததால் முஸ்லிம்களின் கோபத்தை எதிர்கொள்ளும் நிலையில் பிரியங்கா இருக்கிறார். இதனால், ஊடகங்கள் மூலம் அச்சத்தைத் தூண்டும் செயலைச் சுற்றி விளையாட காங்கிரஸ் முயற்சிக்கிறது.
அந்தக் கட்டுரை மிகவும் பழைய ஒன்று. பழைய கதையால் ஈர்க்கப்படுவதற்குப் பதிலாக, கேரள வக்பு வாரியத்திற்கு எதிரான கிராம மக்களின் நீண்டகால போராட்டத்தின் மையமாக இருக்கும் முனம்பம் பிரச்சினையை ராகுல் காந்தி தீர்க்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT