Published : 05 Apr 2025 06:30 PM
Last Updated : 05 Apr 2025 06:30 PM
மும்பை: ‘புக் மை ஷோ’ (BookMyShow) தனது டிக்கெட் விற்பனை மற்றும் கலைஞர்களின் பட்டியலில் இருந்து ஸ்டாண்ட்-அப் காமெடியன் குணால் கம்ராவை நீக்கி இருப்பதாக சிவசேனா நிர்வாகி ரஹுல் கனல் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியின் சமூக ஊடகப்பிரிவு பொறுப்பாளரான ரஹுல் கனல், “இதுபோன்ற கலைஞர்களை தனி பொழுதுபோக்கு பட்டியலில் இருந்து நீக்கி, தங்களின் தளத்தை சுத்தமாக வைத்திருப்பதற்காக புக் மை ஷோ தலைமை செயல் அதிகாரி ஆஷிஷ் ஹேம்ராஜானிக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து புக் மை ஷோ தலைமைச் செயல் அதிகாரிக்கு ரஹுல் எழுதியுள்ள கடிதத்தில், “உங்களின் டிக்கெட் விற்பனை மற்றும் விளம்பரங்களின் பட்டியலில் இருந்து அந்தக் குறிப்பிட்ட கலைஞரை நீக்குவதற்கு உங்கள் குழுவுக்கு நீங்கள் தொடர்ந்து அளித்து வந்த ஆதரவுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், புக் மை ஷோ தேடுதல் பட்டியலில் இருந்து அவரின் நிகழ்ச்சிகளை நீக்கியதற்கும் எனது நன்றிகள். அமைதியைப் பேணுவதிலும், எங்களின் உணர்வுகளை மதிப்பதிலும் நீங்கள் வைத்திருந்த நம்பிக்கை முக்கிய பங்காற்றியுள்ளது.
மும்பைவாசிகள் அனைத்து வகையான கலைகளையும் நேசிக்கிறார்கள் அவற்றை நம்புகிறார்கள். ஆனால், தனிப்பட்ட தாக்குதல்களை இல்லை. ஒரு தீர்வினை கண்டுபிடித்து அதனை அடைவதில் உங்கள் குழுவினருக்கு நீங்கள் அழித்த தனிப்பட்ட அக்கறையும் வழிகாட்டுதலும் மதிப்பு மிக்கது. உங்களின் தொலைநோக்குப் பார்வையும், தலைமையும் உண்மையான உத்வேகம் அளிப்பவை. உங்களின் குழு மூலம் இந்த விவகாரத்துக்கு விரைவில் தீர்வு கண்டதற்கு நன்றி" என்று தெரிவித்துள்ளார்.
இந்தத் தகவல்களுக்கு எதிர்வினையாற்றியுள்ள ஸ்டாண்ட் அப் காமெடியன் குணால் கம்ரா தனது எக்ஸ் தளத்தில், "ஹலோ புக் மை ஷோ, என்னுடைய நிகழ்ச்சிகளை உங்களுடைய தளத்தில் நான் பட்டியலிட முடியுமா என்பதை எனக்கு உறுதிபடுத்த முடியுமா? இல்லை என்றாலும் பரவாயில்லை. நான் புரிந்துகொள்வேன்" என்று தெரிவித்துள்ளார். எனினும், இந்த விவகாரம் தொடர்பாக புக் மை ஷோ நிறுவனம் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.
முன்னதாக, மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த ஸ்டாண்ட்-அப் காமெடியன் குணால் கம்ரா மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆட்டோ ஓட்டியவர் என்ற ரீதியில் தரக்குறைவாக பேசியிருந்தார். மேலும் ஷிண்டேவை துரோகி எனும் விதமாக விமர்சித்திருந்தார். இது தொடர்பாக குணால் மீது வழக்குப் பதிந்து விசாரணைக்கு ஆஜராகுமாறு மும்பை போலீஸார் மூன்று நோட்டீஸ்கள் அனுப்பி உள்ளனர். மூன்று முறையும் அவர் ஆஜராகவில்லை. அதேவேளையில், குணாலின் நிகழ்ச்சி நடந்த ஸ்டுடியோவைத் தாக்கியதாக கனல் மற்றும் சிவசேனா தொண்டர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT