Published : 05 Apr 2025 01:05 AM
Last Updated : 05 Apr 2025 01:05 AM
17 மணி நேர விவாதத்துக்குப் பின் மாநிலங்களவையிலும் வக்பு திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் வக்பு சொத்துக்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் நிர்வாகத்தில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வுகாணும் நோக்கில் கடந்த 1995-ம் ஆண்டின் வக்பு சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளும் மசோதா மற்றும் முஸல்மான் வக்பு (ரத்து) மசோதா-2024 ஆகிய இரண்டையும் மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு நாடாளுமன்றத்தின் மக்களவையில் கடந்த புதன்கிழமை பிற்பகல் தாக்கல் செய்தார்.
மக்களவையில் விவாதங்களுக்குப் பின், நாடாளுமன்ற கூட்டுக்குழு பரிந்துரைத்த திருத்தங்களுடன் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு காங்கிரஸ், திமுக உள்பட இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. வக்பு திருத்த மசோதா மீதான விவாதத்துக்கு 8 மணி நேரம் ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் 12 மணி நேரம் வரை நீட்டிக்கப்பட்டது. நள்ளிரவு 2 மணியளவில் இந்த மசோதா வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. டிவிஷன் முறையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில், மசோதாவுக்கு ஆதரவாக 288 உறுப்பினர்களும் , எதிராக 232 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
இந்நிலையில், மக்களவையில் மசோதா நிறைவேறிய நிலையில், மாநிலங்களவையில் வக்பு சட்ட திருத்த மசோதா நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மசோதாவை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தாக்கல் செய்து பேசியதாவது: வக்பு வாரியத்திடம் ஏராளமான சொத்துகள் உள்ளன. ஆனால் இந்த சொத்துகளால் ஏழை முஸ்லிம்களுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. வக்பு சொத்துகள் தொடர்பாக கடந்த 2006-ம் ஆண்டில் சச்சார் கமிட்டி அறிக்கை சமர்ப்பித்தது. அப்போது வக்பு வாரியங்களிடம் 4.9 லட்சம் சொத்துகள் இருந்தன. அவற்றின் மூலம் ரூ.163 கோடி மட்டுமே வருவாய் ஈட்டப்பட்டது.
வக்பு சொத்துகளை முறையாக நிர்வகித்து இருந்தால் ரூ.12,000 கோடி வரை வருவாய் ஈட்டியிருக்க முடியும். தற்போது வக்பு வாரியங்களிடம் 8.72 லட்சம் சொத்துகள் உள்ளன. இந்த சொத்துகளை முறையாக நிர்வகித்தால் எவ்வளவு வருவாய் கிடைக்கும் என்பதை நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள்.
வக்பு சொத்துகளை முறைப்படி பதிவு செய்ய வேண்டும். ஏழை முஸ்லிம்கள் பலன் அடைய வேண்டும். இவற்றை கருத்தில் கொண்டே வெளிப்படைத்தன்மை, பொறுப்பு, நேர்த்தி ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில் வக்பு சட்ட திருத்த மசோதா வரையறுக்கப்பட்டு இருக்கிறது.
கேரளாவில் 600 குடும்பங்களின் நிலங்களை வக்பு வாரியம் சொந்தம் கொண்டாடுகிறது. இதை எதிர்த்து கத்தோலிக்க பேராயர்கள், பல்வேறு அமைப்புகள் போராடி வருகின்றன. நாடாளுமன்ற கட்டிடம் இருக்கும் இடம் வக்பு வாரியத்துக்கு சொந்தமானது என்று ஒருசாரார் கூறுகின்றனர். இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணவே வக்பு சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்பட்டு உள்ளது. இவ்வாறு அமைச்சர் ரிஜிஜு பேசினார்.
மக்களவையை போலவே மாநிலங்களவையிலும் இந்த மசோதா மீதான விவாதம் 17 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. இந்த மசோதாவின் மீதான விவாதத்தில் பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு பேசினர். இதைத் தொடர்ந்து விவாதத்தின் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பதிலளித்து பேசினார். இதையடுத்து மசோதா மீதான வாக்கெடுப்பு நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. நேற்று அதிகாலை 2.30 மணியளவில் இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
மசோதாவுக்கு ஆதரவாக 128 எம்.பிக்களும், எதிராக 95 எம்.பி.க்களும் வாக்களித்தனர். மாநிலங்களவையில் மசோதா பெரும்பான்மை பெற்ற 119 வாக்குகள் போதும். ஏனெனில் தற்போது மாநிலங்களவையில் உள்ள மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 236 ஆகும். இதையடுத்து அவையில் மசோதா நிறைவேறியுள்ளது.
அதிமுகவின் 4 எம்.பி.க்கள், பாரதீய ராஷ்டிர சமிதியின் 4 எம்.பி.க்கள், பகுஜன் சமாஜ் கட்சியின் ஒரு எம்.பி. ஆகியோர் மசோதாவுக்கு எதிராக வாக்களித்தனர். இந்த மசோதாவுக்கு ஆதரவாக தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி. ஜிகே வாசன் வாக்களித்த நிலையில், வாக்கெடுப்பின்போது பங்கேற்காமல் அன்புமணி ராமதாஸ் புறக்கணித்துவிட்டார். அதிமுக எம்.பி.க்களான தம்பிதுரை, சி.வி. சண்முகம் உள்பட நான்கு எம்.பி.க்களும் மசோதாவுக்கு எதிராக வாக்களித்தனர்.
முக்கியமான சாதனை: மசோதா நிறைவேற்றப்பட்டது தொடர்பாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியதாவது: மாநிலங்களவையில் நாம் ஒரு முக்கியமான சாதனையைப் படைத்துள்ளோம். வக்பு மசோதா மீது 17 மணி நேரம் 2 நிமிடங்கள் விவாதங்கள் நடத்தி புதிய சாதனை படைத்துள்ளோம். இந்த சாதனையை முறியடிப்பது மிகவும் கடினம். வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா மீதான விவாதம் எந்தவொரு இடையூறு இல்லாமல் நடைபெற்றது. இவ்வாறு கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தின் 2 அவைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இனி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் ஒப்புதலுக்காக மசோதா அனுப்பி வைக்கப்படும். குடியரசுத் தலைவர் கையெழுத்திட்ட பிறகு மசோதா சட்ட வடிவம் பெறும்.
பிரதமர் மோடி பாராட்டு: இந்நிலையில் வக்பு திருத்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டதற்கு தொடர்ந்து பிரதமர் மோடி நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது: நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வக்பு சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பது திருப்புமுனையாக அமைந்துள்ளது. நீண்டகாலமாக ஒதுக்கப்பட்டவர்களுக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கும் இந்த மசோதா உதவும். நாடாளுமன்றம் மற்றும் கூட்டுக் குழு விவாதங்களில் பங்கேற்று, தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தி சட்டங்களை வலுப்படுத்த பங்களித்த அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி.
கூட்டுக் குழுவுக்கு மதிப்புமிக்க கருத்துகளை அனுப்பிய எண்ணற்ற மக்களுக்கும் நன்றி. விவாதம் மற்றும் உரையாடலின் முக்கியத்துவம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக வக்பு அமைப்பு வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருந்து வந்தது. குறிப்பாக, முஸ்லிம் பெண்கள், ஏழை முஸ்லிம்கள், பாஸ்மண்டா முஸ்லிம்களுக்கு தீங்கு விளைவித்தது. நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் வருங்காலத்தில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும். மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும். ஒவ்வொரு குடிமகனின் கண்ணியத்துக்கும் முன்னுரிமை அளிப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இதுதான் வலுவான இந்தியாவை உருவாக்குவதற்கான வழி. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT