Published : 04 Apr 2025 11:18 PM
Last Updated : 04 Apr 2025 11:18 PM
புதுடெல்லி: மாநிலங்களவையில் வக்பு சட்ட திருத்த மசோதா மீது நடைபெற்ற விவாதத்தின் போது, குர்ஆன் வசனங்களை மேற்கோள் காட்டி பாஜக எம்.பி. ராதா மோகன் தாஸ் பேசினார்.
மாநிலங்களவையில் வக்பு சட்ட திருத்த மசோதா நேற்றுமுன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீது எம்.பி.க்கள் காரசாரமாக விவாதம் நடத்தினர். பாஜக எம்.பி. ராதா மோகன் தாஸ் அகர்வால் பேசும் போது வக்பு சட்ட திருத்த மசோதாவுக்கு ஆதரவாக, இஸ்லாமியர்களின் புனித நூல் குர்ஆனில் இருந்து 4 வசனங்களை மேற்கோள் காட்டி பேச முன்வந்தார். இது அவையில் இருந்த அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. ராதா மோகன் தாஸ் பேசியதாவது:
நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் நான் உறுப்பினராக இருக்கிறேன். அவர்களும் (எதிர்க்கட்சியினர்) உறுப்பினர்களாக உள்ளனர். ஏதாவது முக்கிய விஷயம் குறித்து ஆலோசனை நடத்தும் போது, மதம் தொடர்பான அறிஞர்களை வரவழைத்தால் அவர்களிடம் நான் குர்ஆனில் இருந்து மேற்கோள் காட்டி பேசியிருக்கிறேன். இதற்கு அவர்கள்தான் (எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள்) சாட்சி.
அதேபோல், அனைத்து விதமான நிதி பரிவர்த்தனைகளுக்கும் எழுத்துப்பூர்வமான ஆவணங்கள் கட்டாயம் இருக்க வேண்டும் என்று குர்ஆனில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஆனால், வக்பு சொத்துகளுக்கு ஆவணங்கள் இல்லை என்று கூறுவது குர்ஆனுக்கு முரணாக உள்ளது. நான் குர்ஆனை படித்து ஒரு கேள்வி கேட்கிறேன். ஒரு சொத்து பகிரங்கமாக நன்கொடையாக வழங்காத நிலையில், அதைப் பயன்படுத்தும் பயனாளர் அந்த சொத்தை வக்பு என்று கருதலாம் என்று குரானில் எங்காவது ஒரு வசனம் அல்லது ஹதீஸில் குறிப்பு உள்ளதா என்று காட்டுங்கள். இந்தக் கேள்விக்கு ஒருவர் கூட பதில் சொல்ல முடியாது. நான் குரானைப் படிப்பதால் என்னை மவுலானா என்கின்றனர். இந்துக்கள் அனைவரும் குரானை முழுமையாகப் படித்து தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு பாஜக எம்.பி. ராதா மோகன் தாஸ் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT