Published : 04 Apr 2025 06:48 PM
Last Updated : 04 Apr 2025 06:48 PM

வக்பு திருத்த மசோதாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி. வழக்கு

புதுடெல்லி: வக்பு திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சில மணி நேரங்களில், அதற்கு எதிராக காங்கிரஸ் எம்.பி முகமது ஜாவேத் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

பிஹாரின் கிஷன்கஞ்ச் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முகமது ஜாவேத், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் அனஸ் தன்வீர் மூலம் தாக்கல் செய்துள்ள மனுவில், "நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள வக்பு திருத்த மசோதா, வக்பு சொத்துகள் மற்றும் அவற்றின் நிர்வாக அதிகாரத்தின் மீது தன்னிச்சையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன் மூலம் முஸ்லிம் சமூகத்தின் மத சுயாட்சியைக் குறைமதிப்புக்கு உட்படுத்தி உள்ளது.

வக்பு சொத்துகள் மீதான அரசின் கட்டுப்பாட்டை விரிவுபடுத்துவதன் மூலமும், தனிநபர்கள் மத நோக்கங்களுக்காக சொத்துகளை நன்கொடையாக அளிப்பதை கட்டுப்படுத்துவதன் மூலமும், வக்பு சொத்துகளை அதிக ஆய்வுக்கு உட்படுத்துவதன் மூலமும், மதச் சொத்துகளின் கட்டுப்பாட்டை மதச்சார்பற்ற அதிகாரிகளுக்கு மாற்றுவது மத மற்றும் சொத்துரிமைகளை மீறக் கூடியது. இது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரானது.

பிற மத அறக்கட்டளைகளின் நிர்வாகத்துக்கு இல்லாத கட்டுப்பாடுகளை வக்புக்கு விதிப்பதன் மூலம் முஸ்லிம்களுக்கு எதிராக இந்த மசோதா பாகுபாடு காட்டுகிறது. உதாரணமாக, இந்து மற்றும் சீக்கிய மத அறக்கட்டளைகள் சுயமாக நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், வக்பு சட்டம் 1995-இல் தற்போது செய்யப்பட்டுள்ள திருத்தங்கள், வக்பு விவகாரங்களில் மாநில அரசின் தலையீட்டை அதிகரிக்கின்றது. இது அரசியலமைப்பின் அடிப்படை அம்சமான பிரிவு 14 (சமத்துவ உரிமை) ஐ மீறுவதாக உள்ளது.

வக்புகளை உருவாக்க அதாவது வக்புக்கு சொத்துகளை தானமாக அளிக்க ஒருவர் குறைந்தது 5 ஆண்டுகள் இஸ்லாமியராக இருந்திருக்க வேண்டும் என்ற விதி மசோதாவில் சேர்க்கப்பட்டுள்ளது. இது இஸ்லாமிய சட்டத்திலும், வழக்கத்திலும் இல்லாத ஒன்று. இது பிரிவு 25-இன் கீழ் மதத்தை வெளிப்படுத்தவும் பின்பற்றவும் உள்ள அடிப்படை உரிமையை மீறுகிறது. இந்த கட்டுப்பாடுகள், மத அல்லது தொண்டு நோக்கங்களுக்காக தங்கள் சொத்துக்களை தானமளிக்க விரும்பும், அதேநேரத்தில் சமீபத்தில் இஸ்லாத்துக்கு மாறியவர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுகிறது. அந்த வகையில் இது பிரிவு 15-ஐ மீறுகிறது.

ஒருவர் தனது சொத்துகளை வக்புக்கு எழுதிவைத்துவிட்டு அதன் நிர்வாகியாக இருக்கும் உரிமையை இந்த மசோதா ரத்து செய்துள்ளது. இந்த விதியை நீக்குவதன் மூலம், பயன்பாட்டின் அடிப்படையில் சொத்துகளை வக்பு என அங்கீகரிக்க வக்பு தீர்ப்பாயத்தின் அதிகாரத்தை இது மட்டுப்படுத்தியுள்ளது. இதன் மூலம் மதப் பிரிவுகள் தங்கள் சொந்த விவகாரங்களை நிர்வகிக்கும் உரிமையை வழங்கும் பிரிவு 26-ஐ இது மீறுகிறது.

மேலும், வக்பு நிர்வாக அமைப்புகளில் முஸ்லிம் அல்லாத உறுப்பினர்களைச் சேர்க்க இந்த மசோதா கட்டாயப்படுத்தியுள்ளது. பல்வேறு மாநிலச் சட்டங்களின் கீழ் இந்துக்களால் மட்டுமே நிர்வகிக்கப்படும் இந்து மத அறக்கட்டளைகளைப் போலல்லாமல், இது மத நிர்வாகத்தில் தேவையற்ற தலையீடாக அமைந்துள்ளது.

வக்பு நிர்வாகத்தில் மாநில அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதன் மூலம், முஸ்லிம் சமூகம் தங்கள் நிறுவனங்களை நிர்வகிக்கும் உரிமையைப் பாதிக்கிறது. வக்பு சொத்துக்களின் தன்மையை தீர்மானிக்கும் அதிகாரம் போன்ற முக்கிய நிர்வாக செயல்பாடுகளை இந்த சட்டம் வக்பு வாரியத்திடமிருந்து மாவட்ட ஆட்சியருக்கு மாற்றுகிறது. மத நிறுவனங்களிலிருந்து அரசு அதிகாரிகளுக்கு இந்தக் கட்டுப்பாடு மாற்றப்படுவது வக்பு நிர்வாகத்தின் சுயாட்சியை நீர்த்துப்போகச் செய்கிறது.

வக்பு தீர்ப்பாயங்களின் அமைப்பு மற்றும் அதிகாரங்களை மாற்றுவதன் மூலம் தகராறுகளை தீர்க்கும் செயல்முறையையும் இந்த சட்டம் மாற்றியமைக்கிறது. இது இஸ்லாமிய சட்டத்தில் நிபுணத்துவம் பெற்ற தனிநபர்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைத்து, வக்பு தொடர்பான தீர்ப்பை பாதிக்கிறது" என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x