Published : 04 Apr 2025 01:47 PM
Last Updated : 04 Apr 2025 01:47 PM

பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு: நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

புதுடெல்லி: நாடாளுமன்ற இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன. இதையடுத்து, பட்ஜெட் கூட்டத் தொடர் நிறைவடைந்தது.

நாடாளுமன்ற மக்களவை இன்று காலை 11 மணிக்கு கூடியது. அப்போது, வக்பு மசோதா நிறைவேற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். அதேபோல், வக்பு மசோதா நிறைவேற்றம் அரசியலமைப்பின் மீதான வெட்கக்கேடான தாக்குதல் என்றும், சமூகத்தை பிளவுபட்ட நிலையிலேயே வைத்திருக்க பாஜக முயலவதாகவும் குற்றம் சாட்டிய காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மன்னிப்பு கோர வலியுறுத்தி ஆளும் கட்சி எம்பிக்களும் அமளியில் ஈடுபட்டனர்.

உறுப்பினர்கள் அமைதி காக்க வேண்டும் என்ற சபாநாயகர் ஒம் பிர்லாவின் வேண்டுகோள் ஏற்கப்படாத நிலையில் அவர் அவையை நண்பகல் 12 மணிக்கு ஒத்திவைத்தார். அவை மீண்டும் கூடியதும் மீண்டும் அமளி ஏற்பட்டதை அடுத்து அவையை தேதி குறிப்பிடாமல் அவர் ஒத்திவைத்தார். இதையடுத்து தேசிய கீதம் இசைக்கப்பட்டு பட்ஜெட் கூட்டத் தொடர் முடித்துவைக்கப்பட்டது.

மாநிலங்களவை காலை 11 மணிக்கு கூடியதும், உறுப்பினர்கள் மத்தியில் பேசிய அவைத் தலைவர் ஜக்தீப் தன்கர், சக்திசிங் கோயல் மற்றும் அருண் சிங் ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். பின்னர், பிரேந்திர பிரசாத் பைஷ்யா மற்றும் மிஷன் ரஞ்சன் தாஸ் ஆகியோர் தங்கள் பதவிக் காலத்திலிருந்து வரும் ஜூன் மாதம் ஓய்வு பெறுகிறார்கள் என்பதை அவைக்குத் தெரிவித்தார்.

அப்போது, மேற்கு வங்கத்தில் மாநில அரசு முறைகேடாக நியமித்த ஆசிரியர்கள் நியமனத்தை செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததை சுட்டிக்காட்டி பாஜக எம்பிக்கள் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இது குறித்துப் பேசிய பாஜக எம்.பி. லட்சுமிகாந்த் பாஜ்பாய், ஓபிசி-க்களுக்கு அநீதி நடந்துள்ளதாக குற்றம் சாட்டினார்.

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரெக் ஓ'பிரையன் பேசுவதற்கு ஜக்தீப் தன்கர் அனுமதி அளித்தார். எனினும், அவையில் தொடர்ந்து அமளி நிலவியதை அடுத்து நண்பகல் வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடியதும், மீண்டும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து, அவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக ஜக்தீப் தன்கர் அறிவித்தார். இதன்மூலம், நாடாளுமன்ற இரு அவைகளிலும் பட்ஜெட் கூட்டத் தொடர் முடிவுக்கு வந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x