Published : 04 Apr 2025 09:13 AM
Last Updated : 04 Apr 2025 09:13 AM
புதுடெல்லி: “வக்பு திருத்தச் சட்டம் ஏழை முஸ்லிம்கள், முஸ்லிம் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கும். நீண்ட காலமாக ஒடுக்கப்பட்டவர்களுக்கும், வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கும் இந்த மசோதா உதவும்.” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மக்களவையில் நிறைவேற்றப்பட்ட வக்பு சட்டத் திருத்த மசோதா, மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. நள்ளிரவு வரை நீடித்த விவாதத்துக்குப் பிறகு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 128 உறுப்பினர்கள் மசோதாவுக்கு ஆதரவாகவும், 95 பேர் எதிராகவும் வாக்களித்தனர். இதனையடுத்து வக்பு சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தாய்லாந்து சென்றுள்ள பிரதமர் மோடி வக்பு சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டதற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், “நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வக்பு சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இது நமது சமூக - பொருளாதார நீதி, வெளிப்படைத்தன்மை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான நம்முடைய கூட்டுத் தேடலின் திருப்புமுனை.
நீண்ட காலமாக ஒடுக்கப்பட்டவர்களுக்கும், வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கும் இந்த மசோதா உதவும். இதனை சாத்தியமாக்க நாடாளுமன்றம் மற்றும் கூட்டுக்குழு விவாதங்களில் பங்கேற்று தங்கள் கருத்துகளை தெரிவித்து வக்பு சட்டத்தை வலுப்படுத்த பங்களித்த உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி.
அதேபோல், நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு மதிப்புமிக்க கருத்துகளை அனுப்பிய எண்ணற்ற மக்களுக்கும் நன்றியை உரித்தாக்குகிறேன். இந்த நடைமுறைகளின் மூலமாக விவாதம், உரையாடலின் முக்கியத்துவத்தை உறுதி செய்துள்ளோம்.
வக்பு அமைப்பு பல ஆண்டுகளாகவே வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருந்தது. குறிப்பாக முஸ்லிம் பெண்கள், ஏழை முஸ்லிம்கள், பாஸ்மண்டா முஸ்லிம்களுக்கு தீங்கு விளைவிப்பதாக இருந்தது.தற்போது நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் வருங்காலத்தில் வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கும். மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும்.
ஒவ்வொரு குடிமகனின் கண்ணியத்துக்கும் முன்னுரிமை அளிப்பதில் இந்த அரசு உறுதியாக இருக்கிறது. இதுதான் வலுவான இந்தியாவை உருவாக்குவதற்கான வழி.” என்று குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT