Published : 03 Apr 2025 07:14 PM
Last Updated : 03 Apr 2025 07:14 PM

சையத் நசீர் உசேன் Vs அமித் ஷா: வக்பு திருத்த மசோதா மீது மாநிலங்களவையில் அனல் பறந்த விவாதம்

அமித் ஷா | சையத் நசீர் உசேன்

புதுடெல்லி: “மத்திய அரசு தாக்கல் செய்துள்ள வக்பு சட்டத் திருத்த மசோதா, அரசியலமைப்பு விதிகளுக்கு எதிரானது” என மாநிலங்களவையில் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் சையத் நசீர் உசேன் விமர்சித்தார்.

வக்பு திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டதை அடுத்து இந்த மசோதா மாநிலங்களவையில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை அறிமுகப்படுத்திய மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, பின்னர் விவாதத்தை தொடங்கிவைத்தார். இந்த மசோதா தொடர்பாக காங்கிரஸ் சார்பில் பேசிய சையத் நசீர் உசேன், "தற்போதுள்ள வக்பு சட்டம் கொடூரமானது என பாஜகவினர் கூறுகிறார்கள். அதன் காரணமாகவே அதில் திருத்தங்கள் கொண்டுவருவதாக அவர்கள் கூறுகிறார்கள்.

இந்த சட்டம் கொடூரமானது என்றால், 1995ல் வக்பு சட்டம் கொண்டுவந்தபோது அதை பாஜக ஆதரித்தது ஏன்? 2013-ல் இந்த சட்டம் ஒருமித்த கருத்தின் அடிப்படையில்தான் திருத்தப்பட்டது. அப்போது ஒப்புக்கொண்டது ஏன்? இவர்கள் ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகள் ஆன பிறகு, தற்போது இந்தச் சட்டம் குறித்து நியாபகம் வந்தது ஏன்? அதுவும், இவர்கள் இம்முறை முழு பெரும்பான்மை பெறாமல் ஆட்சியைப் பிடித்துள்ள தருணத்தில் இந்த திருத்தங்கள் யாரை திருப்திப்படுத்த கொண்டுவரப்பட்டுள்ளன.

இவர்கள் நாட்டு மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தவே இந்த மசோதாவைக் கொண்டு வருகிறார்கள். ஊடகங்களின் ஆதரவுடன் இந்த மசோதா குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. வக்பு வாரியங்களை வலுப்படுத்துவது பற்றி அவர்கள் பேசுகிறார்கள். ஆனால், 10 ஆண்டுகளில் அதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சம்பளம் வழங்கப்படாததால் பல மாநிலங்கள் வக்பு வாரியங்களை அமைக்கவில்லை.

மசோதாவுக்கு ஆதரவாக தங்கள் கருத்துகளை வழங்க, சம்பந்தம் இல்லாத பலர் கூட்டு நாடாளுமன்றக் குழுவிடம் அழைத்து வரப்பட்டனர். வகுப்புவாதத்தை வலியுறுத்தும் அறிக்கைகள் வெளியிடப்பட்டன. மசோதா குறித்து பிரிவு வாரியாக கருத்தில் கொள்ளப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு நடக்கவில்லை. சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து பெறப்பட்ட திருத்தங்கள் அல்லது பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டன. இதில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்கள் அனைத்தும் தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுப்பினர்களால் கொண்டு வரப்பட்டவையே. இந்த திருத்தங்கள் அரசியலமைப்பு விதிகளுக்கு எதிரானவை.

முஸ்லிம்களுக்கு மட்டும் ஏன் வக்பு வாரியங்கள் உள்ளன, மற்ற மதத்தினருக்கு ஏன் இதுபோன்று வாரியங்கள் இல்லை என்பது குறித்து பரவலாக கேள்விகள் எழுந்துள்ளன. இந்து பொது சொத்துகளை நிர்வகிக்க அறக்கட்டளைகள், இந்து சமய அறநிலைய சட்டங்கள் உள்ளன. இதேபோல், கிறிஸ்தவ மதத்துக்கான பொது சொத்துகளை நிர்வகிக்க கவுன்சில்கள் உள்ள. இதேபோல், ஒவ்வொரு மதத்துக்கும் அமைப்புகள் உள்ளன. வக்பு சொத்துகள், அரசின் வருவாய் சட்டங்களுக்கு உட்பட்டவை. வக்பு வழக்குகளை நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம்" என்று சையத் நசீர் உசேன் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா, "தீர்ப்பாயங்களின் தீர்ப்புகளை நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய எந்த ஏற்பாடும் இல்லை. உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் ரிட் மனுக்கள் மூலம் மட்டுமே எழுப்ப முடியும். இதனால், தீர்ப்பாயங்களின் 99% தீர்ப்புகள் இறுதியானதாகவே இருக்கும். எனவே, உறுப்பினர் மக்களை தவறாக வழிநடத்துகிறார்" என குற்றம் சாட்டினார்.

இதையடுத்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, "உறுப்பினர் டாக்டர் சையத் நசீர் உசேன் விரிவாக ஆராய்ச்சி செய்து பேசி வருகிறார். இவ்வாறு நீங்கள் குறுக்கிட்டால், அவரது ஓட்டம் தடைபடும். முன்வரிசையில் உள்ள உறுப்பினர்கள், உறுப்பினரின் உரையில் குறுக்கிட வேண்டாம்" என்று கேட்டுண்டார்.

தொடர்ந்து பேசிய டாக்டர் சையத் நசீர் உசேன், "வக்பு தீர்ப்பாயங்கள் மாநில அரசால் உருவாக்கப்படுகின்றன. வக்பு வாரியங்களால் அல்ல. சொத்துகளை வக்புக்கு வழங்க ஒருவர் குறைந்தது 5 ஆண்டுகள் முஸ்லிமாக இருந்திருக்க வேண்டும் என மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது மிகவும் கவலை அளிக்கக்கூடிய ஒரு அம்சம். இதை எவ்வாறு உறுதி செய்வது? வீடுகளில் தொழுகை செய்கிறார்களா என்று அவர்கள் பார்ப்பார்களா?

தேவாலயங்கள், குருத்வாராக்கள் மற்றும் மடங்கள் போன்ற பிற மத நிறுவனங்களைப் போலவே வக்புகளும் உள்ளன. வக்பு வாரியங்கள் மதச்சார்பற்றதாக மாற்றப்படுகின்றன என்றால், ஒரு கிறிஸ்தவரையோ அல்லது என் போன்ற ஒரு முஸ்லிமையோ அறநிலைய வாரியத்தில் சேர்ப்பார்களா? நாங்கள் நம்பக்கூடியவர்கள் அல்ல; நாங்கள் இரண்டாம் தர குடிமக்கள்; நீங்கள் எங்களை உளவு பார்க்க விரும்புகிறீர்கள் என்பதையே நீங்கள் நிரூபிக்க முயற்சிக்கிறீர்கள்" என தெரிவித்தார்.

முன்னதாக, மக்களவையில் ஆளும் தரப்புக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் விடிய விடிய நடந்த காரசார விவாதத்துக்குப் பிறகு வக்பு திருத்த மசோதா நிறைவேறியது. இதற்கு ஆதரவாக 288 பேரும், எதிராக 232 பேரும் வாக்களித்தனர். அதிகாலை 2 மணியளவில் இந்த மசோதா நிறைவேறியது. தற்போது மாநிலங்களவையில் விவாதம் நடைபெற்று வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x