Published : 03 Apr 2025 03:48 PM
Last Updated : 03 Apr 2025 03:48 PM
புதுடெல்லி: சீனாவுடனான எல்லைப் பிரச்சினை, அமெரிக்காவின் கூடுதல் வரி தொடர்பாக மத்திய அரசை கடுமையாக சாடிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சீனா 4,000 சதுர கி.மீ. இந்திய எல்லையை ஆக்கிரமித்துள்ளதாகவும், அமெரிக்க வரி இந்திய பொருளாதாரத்தை முழுவதும் சீரழித்துவிடும் என்றும் தெரிவித்தார்.
மக்களவையில் பூஜ்ய நேரத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது: நமது நாட்டு எல்லையில் 4000 சதுர கிலோ மீட்டரை சீனா ஆக்கிரமித்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு நமது வெளியுறவு செயலாளர் (விக்ரம் மிஸ்ரி) சீனத் தூதருடன் கேக் வெட்டுவதைப் பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன். இப்போது கேள்வி என்னவென்றால், உண்மையில் சீனா ஆக்கிரமித்துள்ள அந்த 4,000 சதுர கி.மீ. பகுதியில் என்னதான் நடக்கிறது?
கடந்த 2020-ம் ஆண்டு கல்வானில் 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். நாங்கள் இயல்புநிலைக்கு எதிரானவர்கள் இல்லை. ஆனால் அங்கு முன்பிருந்த நிலை தற்போதும் இருக்க வேண்டும். நமது நிலத்தை நாம் திரும்பப் பெற வேண்டும். நமது குடியரசுத் தலைவரும், பிரதமரும் சீனாவுக்கு கடிதம் எழுதி உள்ளதாக நான் அறிகிறேன்.
இதையும் நமது மக்கள் யாரும் சொல்லவில்லை. பிரதமரும், குடியரசுத் தலைவரும் தங்களுக்கு கடிதம் எழுதி இருப்பதாக சீன தூதர் இந்திய மக்களுக்கு தெரிவித்துள்ளார். வெளியுறவுக் கொள்கை என்பது வெளிநாடுகளுடனான உறவை நிர்வகிப்பதைக் குறிக்கும். நீங்கள் சீனாவுக்கு நமது நிலத்தில் 4000 சதுர கி.மீ. விட்டுக்கொடுத்துள்ளீர்கள்.
நமது நட்பு நாடான அமெரிக்கா திடீரென நம் மீது வரிகளை விதிக்கிறது. அமெரிக்காவின் இந்த வரிவிதிப்பு இந்திய பொருளாதாரத்தை, குறிப்பாக வாகன உற்பத்தி, மருந்து தயாரிப்பு, விவசாயத்துறைகளை சீர்குலைக்கப் போகிறது.
இந்திரா காந்தியிடம் ஒருமுறை ஒருவர்‘வெளியுறவு கொள்கை விஷயத்தில் நீங்கள் வலது அல்லது இடது பக்கங்களில் எங்கு சாய்வீர்கள்’ எனக் கேட்டார். அதற்கு இந்திரா காந்தி,‘ நான் வலது, இடது எந்தப்பக்கமும் சாயமாட்டேன், நேராக நிற்பேன், நான் இந்தியர்; நேராக நிற்பேன்’ என்றார்.
ஆனால் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் வேறு வகையான கொள்கையை வைத்துள்ளது. அவர்களிடம் வலதா, இடதா எனக் கேட்டால், எங்கள் முன்பு இருக்கும் வெளிநாட்டினர் முன்பு நாங்கள் தலைவணங்கி நிற்போம் என்று கூறுவார்கள். இது அவர்களின் கலாச்சாரத்தில், வரலாற்றில் உள்ளது. நமக்கும் அது தெரியும்.
நமது எல்லையில், நம் மீது விதிக்கப்பட்டுள்ள வரிகளில் இந்தியா என்ன செய்யப்போகிறது என்பது குறித்து மத்திய அரசு விளக்க வேண்டும். இவ்வாறு ராகுல் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT