Published : 03 Apr 2025 02:15 PM
Last Updated : 03 Apr 2025 02:15 PM

‘வக்பு மசோதா ஏழை முஸ்லிம்களுக்கு ஒரு பரிசை கொண்டுவரப் போகிறது’ - இந்திய சூஃபி அறக்கட்டளை

புதுடெல்லி: வக்பு மசோதா ஏழை முஸ்லிம்களுக்கு ஒரு பரிசை கொண்டு வரப்போகிறது என தெரிவித்துள்ள இந்திய சுஃபி அறக்கட்டளை தலைவர் காஷிஷ் வார்சி, முஸ்லிம்கள் அனைவரும் வக்பு மசோதாவை படிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இந்திய சூஃபி அறக்கட்டளையின் தலைவர் காஷிஷ் வார்சி, "இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதற்காக அரசுக்கு எனது வாழ்த்துகள். வக்பு மசோதாவால் முஸ்லிம்களுக்கு எந்தத் தீங்கும் இல்லை என்பதை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் உரை தெளிவுபடுத்தியுள்ளது.

நாட்டில் உள்ள முஸ்லிம்கள் இந்த மசோதாவைப் படிக்க வேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன். பாஜகவின் பெயரில் அச்சத்தைப் பரப்பும் ஒரு விஷயத்தை மட்டுமே சில கட்சிகள் செய்கின்றன. ஆனால் முஸ்லிம்களின் நண்பர் யார், எதிரி யார் என்பது இப்போது தெளிவாகியுள்ளது. வக்பு மசோதா ஏழை முஸ்லிம்களுக்கு ஒரு பரிசைக் கொண்டுவரப் போகிறது.” என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர், இந்த மசோதா மாநிலங்களவையில் இன்று நிறைவேற்றப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வக்பு சட்ட திருத்த மசோதாவை மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களவையில் நேற்று மதியம் 12 மணிக்கு தாக்கல் செய்தார். அதிகாலை 2 மணி வரை விவாதங்கள் நடத்தப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், மசோதாவுக்கு ஆதரவாக 288 பேரும், எதிராக 232 பேரும் வாக்களித்தனர். இதையடுத்து, மக்களவையில் மசோதா நிறைவேறியது.

முன்னதாக மசோதா மீதான விவாதத்தை தொடங்கி வைத்து பேசிய கிரண் ரிஜிஜு, "வக்பு திருத்த மசோதாவுக்காக அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு, 92.27 லட்சத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் நேரடியாகவும் இணையவழியிலும் குவிந்தன. அவை ஒவ்வொன்றையும் ஆராய்ந்து அதன் அடிப்படையில் அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வக்பு வாரியங்கள் மட்டுமல்லாது 284 குழுக்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்தன. அதன் அடிப்படையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மசோதா ‘உமீது’ மசோதா என பெயர் மாற்றப்படும். (Unified Waqf Management Empowerment, Efficiency and Development (UMEED) Bill). அனைத்து மத அமைப்புகளையும் அவற்றின் சுயாட்சியையும் அரசு மதிக்கிறது. அவர்களுடைய மத விவகாரங்களில் தலையிட அரசு முயற்சிக்கவில்லை. அதேநேரம், சொத்துகளை நிர்வகிக்கும் விவகாரத்தில் தேவையான சீர்திருத்தங்களை கொண்டுவரவும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவுமே வக்பு திருத்த மசோதா வகை செய்கிறது.

இது முற்றிலும் சொத்துகளை கண்காணிப்பது மற்றும் நிர்வாகம் செய்வது பற்றிய விஷயம் ஆகும். குறிப்பாக, இப்போது உள்ள சட்டத்தின் 40-வது பிரிவின்படி எந்த ஒரு நிலத்தையும் வக்பு சொத்து என வக்பு வாரியத்தால் அறிவிக்க முடியும். இந்த கடுமையான பிரிவு நீக்கப்படுகிறது. அதேநேரம் மசூதி நிர்வாகத்தில் எந்த மாற்றமும் செய்யப்படமாட்டாது.

முஸ்லிம்கள் நிலம் பறிக்கப்படாது இந்த புதிய மசோதா முஸ்லிம்களின் நிலத்தை பறிக்க வகை செய்வதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் அவ்வாறு எந்த நிலமும் பறிக்கப்படாது. இந்தப் பிரச்சினையை அரசியலாக்க முயற்சிக்கிறார்கள்.

டெல்லியில் உள்ள நாடாளுமன்றம் உட்பட பல சொத்துகள் தொடர்பாக 1970 முதல் ஒரு வழக்கு நடந்து வருகிறது. இந்த சொத்துகளுக்கு டெல்லி வக்பு வாரியம் உரிமை கோருகிறது. மோடி அரசு ஆட்சிக்கு வராமல் இருந்திருந்தால், பல சொத்துகள் வக்பு வாரியத்தின் வசமாகி இருக்கும்" என்று தெரிவித்தார்.

அமித் ஷா விளக்கம்: மத்திய அமைச்சர் அமித் ஷா பேசும்போது, “வக்பு சட்டத்தின்படி, கோயில்கள், பிற மதத்தினர், அரசுகள் ஆகியோருக்கு சொந்தமான நிலங்கள் வக்பு சொத்துகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக டெல்லியின் லுட்யன்ஸ் பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான ஒரு சொத்து வக்பு வசமானது. தமிழ்நாட்டில் உள்ள 400 ஆண்டுகள் பழமையான கோயிலுக்கு சொந்தமான சொத்தும் வக்பு சொத்து என அறிவிக்கப்பட்டது. இவற்றுக்கெல்லாம் முடிவு கட்டுவதற்குதான் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முஸ்லிம் அல்லாதவர்களை வக்பு வாரியத்தில் சேர்ப்பதால் பல்வேறு தலையீடுகள் இருக்கும் என்ற எதிர்க்கட்சியினரின் வாதங்களை பார்க்க முடிந்தது. இந்த சட்ட திருத்தம் அதற்காக கொண்டு வரப்படவில்லை. சிறுபான்மையினரிடையே தங்களது வாக்கு வங்கிக்காக அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இந்தத் தவறான கருத்து பரப்பப்படுகிறது.

முஸ்லிம் அல்லாத வக்பு வாரிய உறுப்பினர்கள் மத விவகாரங்களில் தலையிட மாட்டார்கள். வக்பு வாரியத்தின் நிர்வாகம் மற்றும் நன்கொடை நிதி சார்ந்த விஷயத்தில் நிர்வாக ரீதியாக அவர்கள் பணிபுரிவார்கள். அனைத்தும் சட்டப்படி நடக்கிறதா, ஏழை எளிய இஸ்லாமிய மக்களின் தேவைக்காக நிதி செலவிடப்படுகிறதா என்பதை அவர்கள் கவனிப்பார்கள். அனைத்துக்கும் கணக்கு இருக்கும். வெளிப்படைத்தன்மைக்காக ஓய்வுபெற்ற சிஏஜி அதிகாரிகள் கணக்கு விவகாரங்களை கவனிப்பார்கள்" என பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x