Published : 03 Apr 2025 01:59 PM
Last Updated : 03 Apr 2025 01:59 PM

''அமெரிக்க வரிவிதிப்பின் தாக்கம் குறித்து முதலில் ஆய்வு; பிறகு...'' - நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி

புதுடெல்லி: அமெரிக்கா விதித்துள்ள கூடுதல் வரி விதிப்பு குறித்து ஆய்வு செய்து, பிறகு அதன் தாக்கம் குறித்து மதிப்பாய்வு செய்து அதன் பிறகு அதனை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

இந்தியா உட்பட உலகின் பல நாடுகளுக்கு பரஸ்பர வரிவிதிப்பு முறையை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவின் இந்த அறிவிப்பு குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, "டொனால்ட் ட்ரம்பிற்கு, அமெரிக்கா முதலில், பிரதமர் நரேந்திர மோடிக்கு, இந்தியா முதலில். நாங்கள் முதலில் அதை பகுப்பாய்வு செய்வோம், பின்னர் அதன் தாக்கத்தை மதிப்பிட்டு அதை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து பார்ப்போம்" எனத் தெரிவித்தார்.

முன்னதாக, தொழில்துறை அமைப்பான ASSOCHAM தலைவர் சஞ்சய் நாயர், "விரி விதிப்பு கட்டணங்களைப் பார்க்கும்போது, ​​நாம் அவ்வளவு மோசமாகப் பாதிக்கப்படவில்லை என்று நினைக்கிறேன். கட்டண எண்ணிக்கை அதிகமாகத் தெரிகிறது, ஆனால் மற்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் ஒப்பிடும்போது, ​​அது சிறப்பாகத் தெரிகிறது.

ஆசியாவுக்குள் வர்த்தகம், விநியோகச் சங்கிலிகளில் ஒரு பெரிய மறுசீரமைப்பு இருக்கும் என்று நான் நினைக்கிறேன். இதற்கு எல்லாம் நேரம் எடுக்கும். மருந்துப் பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால், ஒப்பீட்டளவில் நாம் குறைவான பாதிப்பையே சந்திப்போம். மேலும், செயல்திறனை மேம்படுத்துவது இப்போது நமது தொழில்துறையின் பொறுப்பாகும். இந்திய சந்தையில் அமெரிக்கப் பொருட்களுக்கான வாய்ப்பை எவ்வாறு வழங்குவது என்பது பற்றி நாம் சிந்திக்க வேண்டும்," என்று கூறினார்.

இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற டொனால்ட் ட்ரம்ப், பல நாடுகள் அமெரிக்கப் பொருட்களுக்கு அதிக வரியை விதிப்பதாகவும் இதனால் அமெரிக்கப் பொருட்களுக்கான ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் கூறி இருந்தார். பதிலுக்கு, பரஸ்பர வரி விதிப்பு கொள்கையை அமல்படுத்தப் போவதாகவும் கடந்த பிப்ரவரியில் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து வரி விகிதங்கள் குறித்த அறிவிப்பை நேற்று (ஏப். 2) வெளியிட்டார்.

அதன்படி, சீனா (34 சதவீதம்), ஐரோப்பிய ஒன்றியம் (20 சதவீதம்), வியட்நாம் (46 சதவீதம்), தைவான் (32 சதவீதம்), ஜப்பான் (24 சதவீதம்), இந்தியா (26 சதவீதம்), இங்கிலாந்து (10 சதவீதம்), வங்கதேசம் (37 சதவீதம்), பாகிஸ்தான் (29 சதவீதம்), இலங்கை (44 சதவீதம்), இஸ்ரேல் (17 சதவீதம்) என இறக்குமதி வரி உயர்வு விகிதங்களை டிரம்ப் அறிவித்துள்ளார்.

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் எஃகு, அலுமினியம் மற்றும் வாகன உதிரிபாகங்கள் ஆகியவற்றுக்கு 27 சதவீத வரி விதிக்கப்படும். அதேநேரத்தில், மருந்துகள், குறைக்கடத்திகள், தாமிரம் அல்லது எரிசக்தி பொருட்களுக்கு எந்த வரியும் விதிக்கப்படாது.

சீனா, தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது இந்தியப் பொருட்களுக்கு ஒப்பீட்டளவில் குறைந்த வரிகள் விதிக்கப்பட்டுள்ளதால், இந்திய ஏற்றுமதிகளுக்கு சாதகமான வாய்ப்பு உருவாகி இருப்பதாகவும் தொழில்துறையினர் கருத்து தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x