Published : 03 Apr 2025 09:23 AM
Last Updated : 03 Apr 2025 09:23 AM
புதுடெல்லி: மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் சமாஜ்வாதி எம்.பி அகிலேஷ் யாதவ் இடையிலான அரசியல் கிண்டலால் சிரிப்பலை எழுந்தது.
வக்பு திருத்த மசோதா மீதான விவாதத்தின்போது சமாஜ்வாதி கட்சித் தலைவரும் எம்.பி.யுமான அகிலேஷ் யாதவ் பேசும்போது, “இந்த மசோதா நம்பிக்கையை கொடுக்கும் என அமைச்சர் கூறுகிறார். ஆனால் அது எப்படி என்று ஆங்கிலத்தில் அல்லது இந்தியில் கூட என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை” என்றார். அப்போது அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.
அகிலேஷ் மேலும் கூறும்போது, “உலகிலேயே மிகப்பெரிய கட்சி என கூறிக் கொள்பவர்களால் தங்கள் தலைவரைக் கூட தேர்ந்தெடுக்க முடியவில்லை” என்றார்.
இதற்கு பாஜக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, மத்திய அமைச்சர் அமித் ஷா எழுந்து நின்று, “அகிலேஷ் சொன்னது சிரிப்பை வரவழைத்தது. நானும் அதே தொனியில் பதில் சொல்கிறேன். ஒரு குடும்பத்தின் 5 உறுப்பினர்கள் மட்டுமே சேர்ந்து உங்கள் கட்சியின் தலைவரை தேர்ந்தெடுக்க முடியும். ஆனால் எங்கள் கட்சித் தலைவரை உரிய முறைப்படிதான் தேர்ந்தெடுக்க முடியும். 12 முதல் 13 கோடி உறுப்பினர்கள்தான் எங்கள் தலைவரை தேர்ந்தெடுப்பார்கள். எனவே, இதில் தாமதம் ஏற்படத்தான் செய்யும். உங்கள் விஷயத்தில் ஒருபோதும் தாமதம் ஏற்படாது. ஏனெனில் அடுத்த 25 ஆண்டுக்கு நீங்கள் தான் தலைவராக இருப்பீர்கள்” என்றார். அமித் ஷாவின் இந்தப் பேச்சால் அவையில் மீண்டும் சிரிப்பலை ஏற்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகம் சென்றிருந்தார். இந்நிலையில், அவருக்கு 75 வயது முடியவுள்ள நிலையில், தனக்கு பதவி நீட்டிப்பு வேண்டி அங்கு சென்றாரா என அகிலேஷ் மறைமுகமாக கேள்வி எழுப்பினார்.
பாஜகவைப் பொறுத்தவரை 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் அமைச்சர் பதவியில் நீடிப்பதில்லை. இது அக்கட்சியின் எழுதப்படாத விதியாக உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அதுபோன்ற வயது உச்சவரம்பு எதுவும் இல்லை என பாஜக கூறியிருந்தது. இதை மனதில் வைத்துதான் அகிலேஷ் யாதவ் அவ்வாறு கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT