Published : 02 Apr 2025 01:18 PM
Last Updated : 02 Apr 2025 01:18 PM
புதுடெல்லி: வக்பு திருத்த மசோதாவினை நாடாளுமன்ற விவாகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களவையில் தாக்கல் செய்தார். இதையடுத்து, மசோதா மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
எதிர்க்கட்சிகளின் அமளிகளுக்கு மத்தியில் இன்று பகல் 12 மணிக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, அமைச்சர் கிரண் ரிஜிஜுவை வக்பு திருத்த மசோதாவை தாக்கல் செய்யுமாறு அழைத்தார். மசோதா தாக்கல் செய்தவற்கு காங்கிரஸ் எம்.பி. வேணுகோபால் முதல் ஆட்சேபத்தை பதிவு செய்தார். அப்போது, "எந்த ஒரு வேறுபாடும் இல்லாமல், இரண்டு தரப்பிடமிருந்தும் திருத்தங்களுக்கு சமமான நேரத்தை நான் ஒதுக்கியுள்ளேன்" என்று சபாநாயகர் தெரிவித்தார்.
அமித் ஷா பதில்: இதனிடையே எதிர்க்கட்சிகளின் ஆட்சேபனைகளுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் பதில் அளித்தார். அவர் கூறுகையில், "வக்பு திருத்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது, அமைச்சரவை ஒப்புதலுக்கு முன்பாக பரிந்துரைகள் சொல்லப்பட்டது. நாங்கள் காங்கிரஸ் குழுவைப் போல இல்லை. அது ரப்பர் ஸ்டாம்ப் போல இருந்தது. எங்களின் குழு முழுமையாக விவாதம் நடத்தியது" என்று தெரிவித்தார்.
நாடாளுமன்ற கூட்டுகுழுவை வாழ்த்திய கிரண்: தொடர்ந்து பேசிய அமைச்சர் கிரண் ரிஜிஜு, நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு தனது வாழ்த்தினைத் தெரிவித்தார். அவர் கூறுகையில், "நான் இரு அவைகளைச் சேர்ந்த நாடாளுமன்ற கூட்டுக்குழு உறுப்பினர்களுக்கும் வாழ்த்துகளை கூற விரும்புகிறேன். மொத்தம் 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தின் வக்பு வாரியத்தைச் சேர்ந்த 284 உறுப்பினர்கள் அவர்களின் கருத்துக்களை குழுவிடம் சமர்ப்பித்துள்ளனர்.
நேர்மறைான திருத்தங்களை நாங்கள் அறிமுகப்படுத்தும் போது ஏன் எங்கள் மீது கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இந்த மசோதாவுடன் சம்மந்தப்படாதவர்கள் தவறாக வழிநடத்துகிறார்கள். நாங்கள் மசோதாவை அறிமுகப்படுத்தவில்லை என்றால், நாடாளுமன்ற கட்டிடம் கூட வக்பு சொத்தாக உரிமை கோரப்பட்டிருக்கும்" என்றார்.
வக்பு திருத்த மசோதாவை அறிமுகப்படுத்தி அமைச்சர் கிரண் ரிஜிஜு பேசும் போது எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு குரல் எழுப்பினர். கூச்சலுக்கு மத்தியில், பேசிய அவர், "இந்த சட்டத் திருத்த மசோதா முஸ்லிம்களின் நம்பிக்கையை மீறவில்லை, மீறும் நோக்கமும் இல்லை. மத அடிப்படையில் இது தாக்கல் செய்யப்படவில்லை. மாறாக சொத்துக்கள் மேலாண்மைக்கு மட்டுமே பொருந்தும்" என்று வலியுறுத்தினார்.
முன்னதாக இந்த மசோதா மீது 8 மணி நேரம் விவாதம் நடத்தப்படும் என்றும், தேவைப்படின் சூழலைப் பொறுத்து கூடுதல் நேரம் விவாதிக்கப்படும் என்றும் கிரண் ரிஜிஜு தெரிவித்திருந்தார். இதன்பிறகு வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களவையில் மொத்தம் 543 எம்பிக்கள் உள்ளனர். வக்பு சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்ற 272 எம்பிக்களின் ஆதரவு தேவை. பாஜக மற்றும் பாஜக கூட்டணிக்கு 294 எம்பிக்களின் ஆதரவு உள்ளது. காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு 234 எம்பிக்களின் ஆதரவு உள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT