Published : 02 Apr 2025 10:22 AM
Last Updated : 02 Apr 2025 10:22 AM

'புகார் எழாதவரை வக்பு சொத்து உரிமையில் மாற்றம் இருக்காது' - மசோதாவில் முக்கிய அம்சம் சேர்ப்பு?

கோப்புப் படம்

புதுடெல்லி: வக்பு சொத்துக்களில் சர்ச்சை எழாதவரை அல்லது அது அரசு சொத்தாக இல்லாதவரை அந்த சொத்துக்களின் உரிமையில் மாற்றம் இருக்காது எனும் சரத்து வக்பு திருத்த மசோதாவில் சேர்க்கப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வக்பு திருத்த மசோதா மக்களவையில் இன்று மதியம் 12 மணிக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த மசோதா மீது 8 மணி நேரம் விவாதம் நடத்தப்படும் என்றும், தேவைப்படின் சூழலைப் பொறுத்து கூடுதல் நேரம் விவாதிக்கப்படும் என்றும் மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சரும் சிறுபான்மை நலத்துறை அமைச்சருமான கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். இதன்பிறகு வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதலில் இந்த மசோதா கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர், அது நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டது. அங்கு இந்த மசோதா குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு, சில திருத்தங்களுடன் இன்று தாக்கல் செய்யப்பட இருக்கிறது.

இதில் முக்கிய திருத்தமாக, வக்பு சொத்துக்களில் சர்ச்சை எழாதவரை அல்லது அது அரசு சொத்தாக இல்லாதவரை அந்த சொத்துக்களின் உரிமையில் மாற்றம் இருக்காது எனும் சரத்து வக்பு திருத்த மசோதாவில் சேர்க்கப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சரத்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் தாக்கல் செய்த மசோதாவில் இல்லை என்றும் கூறப்படுகிறது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகியவை எழுப்பிய கவலைகளைத் தொடர்ந்து சில முக்கிய மாற்றங்கள் சேர்க்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.

திருத்தங்கள் என்ன?: பழைய சட்டத்தின்படி வக்பு வாரியம் உரிமை கோரும் நிலங்கள் தொடர்பான புகார்களை வக்பு தீர்ப்பாயம் மட்டுமே விசாரிக்க முடியும். தற்போதைய சட்ட திருத்தங்களின்படி வருவாய் நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களும் வக்பு வாரிய சொத்துகள் குறித்து விசாரணை நடத்த முடியும்.

பழைய சட்டத்தின்படி வக்பு தீர்ப்பாயத்தின் முடிவே இறுதியானது. இந்த முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாது. புதிய சட்டத் திருத்தங்களின்படி வக்பு தீர்ப்பாயத்தின் முடிவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடியும்.

பழைய சட்டத்தின்படி ஓர் இடத்தில் மசூதி அல்லது முஸ்லிம் அமைப்புகளின் கட்டிடங்கள் இருந்தால் அந்த இடம் தானாகவே வக்பு வாரியத்துக்கு சொந்தமாகி விடும். புதிய சட்ட திருத்த மசோதாவின்படி, வக்பு வாரியத்துக்கு நிலம் தானமாக அளிக்கப்பட்டு இருந்தால் மட்டுமே அந்த நிலம் சட்டப்பூர்வமானது. வேறு இடத்தில் மசூதி கட்டப்பட்டு இருந்தால், அந்த இடம் வக்பு வாரிய சொத்தாக கருதப்படாது.

பழைய சட்டத்தின்படி பெண்கள் மற்றும் இதர மதங்களை சேர்ந்தவர்கள் வக்பு வாரியத்தில் உறுப்பினராக அனுமதி கிடையாது. புதிய சட்ட மசோதாவின்படி 2 பெண்கள் மற்றும் இதர மதங்களை சேர்ந்த 2 பேர் வக்பு வாரியத்தில் உறுப்பினராக இணைக்கப்படுவர்.

தாவூதி போரா உள்ளிட்ட பிரிவினருக்காக தனி வக்பு வாரியம் அமைக்கவும் வக்பு சட்ட திருத்த மசோதாவில் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.

வக்பு வாரிய சொத்துகளை முறைப்படி பதிவு செய்ய வேண்டும். இந்த சொத்துகளின் விவரங்கள் மாவட்ட வருவாய் துறை இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் சட்ட திருத்த மசோதாவில் இடம்பெற்றுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x