Published : 02 Apr 2025 07:56 AM
Last Updated : 02 Apr 2025 07:56 AM
பெங்களூரு: கர்நாடகாவின் தாவணகெரே மாவட்டத்தில் உள்ள நியாமதி டவுனில் பாரத ஸ்டேட் வங்கி உள்ளது. கடந்த ஆண்டு இந்த வங்கியில் ரூ.13 கோடி மதிப்பிலான 17.7 கிலோ எடையுள்ள தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது. வங்கியில் இருந்த சிசிடிவி கேமராக்களையும் திருடிச் சென்றனர். இதனால் குற்றவாளிகளை உடனடியாக கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதனிடையே நியாமதி டவுனை சேர்ந்த உள்ளூர் குற்றவாளிகளையும் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது உள்ளூரை சேர்ந்த சிலர் அதில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. வங்கி கொள்ளை சம்பவம் நடந்த தினத்தில் இருந்து நியாமதியில் இருந்த ஐயங்கார் பேக்கிரி மூடப்பட்டு கிடந்ததால், போலீஸார் சந்தேகம் அடைந்தனர்.
இதனையடுத்து கடந்த வாரம், பேக்கரி கடை உரிமையாளர் விஜயகுமாரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர் வங்கியில் ரூ.15 லட்சம் கடன் கேட்டதாகவும், அதனை தர மறுத்ததால் கொள்ளையர்கள் மூலம் நகைகளை திருடியதாகவும் ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீஸார் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட விஜயகுமாரையும், அவரது சகோதரர் அஜய்குமார், நியாமதி டவுனை சேர்ந்த அபிஷேகா, சந்துரு, மஞ்சுநாத், பரமானந்தா ஆகிய 6 பேரையும் கைது செய்தனர்.
மதுரையை சேர்ந்த விஜயகுமார் கொள்ளையடித்த தங்க நகைகளை உசிலம்பட்டி அருகே விவசாய கிணற்றில் கண்டெயினரில் வைத்து பதுக்கி வைத்திருப்பதாக கூறினார். அங்கு விரைந்த தனிப்படை போலீஸார், நீச்சல் வீரர்கள் மூலம் ரூ.13 கோடி மதிப்பிலான தங்க நகைகளை மீட்டனர்.
இதுகுறித்து தனிப்படை அதிகாரி சாம் வர்கீஸ் கூறுகையில், “மதுரையை சேர்ந்த பேக்கரி உரிமையாளர் விஜயகுமார் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நியாமதி டனில் பேக்கரி தொழில் செய்து வருகிறார். தனது கடனை அடைப்பதற்காக வங்கியில் ரூ.15 லட்சம் கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளார். அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதால் தனது சகோதர் அஜய்குமார் மூலம் கொள்ளையர்களை திரட்டி, வங்கி கொள்ளையில் ஈடுபட்டுள்ளார். மனி ஹெயிஸ்ட் வெப் சீரிஸை பார்த்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT