Published : 29 Mar 2025 02:19 PM
Last Updated : 29 Mar 2025 02:19 PM
புதுடெல்லி: முன்னர் உறுதியளித்தபடி ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், அதற்கான காலக்கெடு குறித்து அவர் தெரிவிக்கவில்லை.
நேற்று (மார்ச் 28, 2025) இரவு நடைபெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமித் ஷா, “ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து மீண்டும் வழங்கப்படும் என்று நாங்கள் உறுதியளித்துள்ளோம். ஆரம்பத்திலிருந்தே, மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று நாங்கள் கூறி வருகிறோம். ஆனால் அது எப்போது என்பதை பொது மன்றத்தில் வெளியிட முடியாது.
மோடி அரசாங்கத்தின் கீழ், ஜம்மு காஷ்மீரில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு எந்த இடத்திலும் மறு வாக்குப்பதிவு இல்லாத முதல் தேர்தல் நடந்துள்ளது. ஒரு கண்ணீர் புகை குண்டு வீச்சோ அல்லது ஒரு துப்பாக்கிச் சூடோ இல்லை. 60% மக்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தினர். இது ஒரு பெரிய மாற்றம்" என்று தெரிவித்தார்.
ஆர்எஸ்எஸ் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமித் ஷா, "கடந்த 100 ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ். தேசபக்தர்களைத் தயார்படுத்தி வருகிறது. பல பரிமாணங்களை ஒன்றிணைத்து, தேசபக்தியை மையமாக வைத்திருக்க முடியும் என்பதை ஆர்.எஸ்.எஸ்ஸிடமிருந்து நான் கற்றுக்கொண்டேன்" என கூறினார்.
வக்பு சட்டத் திருத்தத்தின் முக்கியத்துவம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமித் ஷா, "சுதந்திரப் போராட்ட வீரர் சந்திரசேகர் ஆசாத் இறந்த இடத்தை வக்பு தனது சொத்தாகக் கருதுகிறது. நாடாளுமன்றத்தையும், குடியரசுத் தலைவர் மாளிகையையும் வக்பு தனது சொத்தாகக் கருதுகிறது. மக்களை திருப்திப்படுத்தும் முயற்சியில், காங்கிரஸ் ஒரு வக்பு சட்டத்தை உருவாக்கியது. அதை நீதிமன்றத்தில் கூட சவால் செய்ய முடியாது. மோடி அரசு அதை அரசியலமைப்பின் வரம்பிற்குள் கொண்டு வருகிறது" என தெரிவித்தார்.
அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் கர்நாடக அரசின் முடிவு குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமித் ஷா, "வாக்கு வங்கிக்காக, காங்கிரஸ் மதத்தின் அடிப்படையில் 'ஒப்பந்தங்களை' வழங்க விரும்புகிறது. மதத்தின் அடிப்படையில் அல்லாமல், தரம் மற்றும் விலையின் அடிப்படையில் ஒப்பந்தங்கள் வழங்கப்பட வேண்டும்" என்றார்.
மேலும் அவர், "திமுக தனது ஊழலை மறைக்கவும், வரவிருக்கும் தேர்தலில் உடனடி தோல்வியை தடுக்கவும் மட்டுமே மொழி மற்றும் தொகுதி மறுசீரமைப்பு பிரச்சினையை எழுப்புகிறது. தொகுதி மறுசீரமைப்பு செய்வதால் யாருக்கும் எந்த அநீதியும் ஏற்படாது என பிரதமர் மோடி அவர்கள் வாக்குறுதி அளித்துள்ளார்" என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT