Published : 13 Mar 2025 06:37 PM
Last Updated : 13 Mar 2025 06:37 PM

“பாஜக சதிக்கு எதிரான ஸ்டாலின் முன்னெடுப்பு!” - மறுசீரமைப்பு குறித்த கூட்டத்தில் பங்கேற்பதாக ரேவந்த் ரெட்டி உறுதி

ஹைதராபாத்: "தொகுதி மறுசீரமைப்பு என்பது தென்மாநிலங்களுக்கான வரம்புகள் நிர்ணயமே. அது அவைகளுக்கான தொகுதிகள் குறைப்பாகவே இருக்கும்" என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார். மேலும், தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் மத்திய அரசு தென்மாநிலங்களுக்கு எதிராக சதி செய்கிறது என்றும் சாடியுள்ளார்.

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மார்ச் 22-ம் தேதி நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு குறித்த கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க வரும்படி 5 மாநில முதல்வர்கள், பல்வேறு கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அவர்களுக்கு கடிதமும் எழுதியுள்ளார். இதனைத் தொடர்ந்து திமுக எம்.பிக்கள், தமிழக அமைச்சர்கள் சம்மந்தப்பட்ட முதல்வர்களைச் சந்தித்து தமிழக முதல்வரின் கடிதங்களை நேரில் வழங்கி கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்து வருகின்றனர்.

அதன்படி, தமிழக அமைச்சர் கே.என்.நேரு, எம்.பி. என்.ஆர். இளங்கோ ஆகியோர் தெலங்கானா முதல்வரைச் சந்தித்து, கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தனர். அப்போது திமுக எம்.பி.க்கள் கனிமொழி, ஆ.ராசா, அருண் நேரு, கலாநிதி வீராசாமி ஆகியோர் உடனிருந்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறுகையில், “தொகுதி மறுசீரமைப்பு என்பதை தென்மாநிலங்களுக்கு வரம்புகளை நிர்ணயிப்பதாகவே இருக்கும். அது தொகுதி மறுசீரமைப்பு இல்லை. தென்மாநிலங்களுக்கான தொகுதிகள் குறைப்பு. எந்தச் சூழ்நிலையிலும் இந்தத் தொகுதி மறுசீரமைப்பை தென்மாநிலங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடாது.

வடக்கு மாநிலங்களை விட நாங்கள் அதிகம் வரி செலுத்துகிறோம். நம்மிடம் அதிகமான தொழில்முனைவோர் உள்ளனர். நாட்டுக்கு நாம் அனைத்தையும் வழங்குகிறோம். கேரளா, தமிழகம், தெலங்கானா மற்றும் கர்நாடகா மக்கள் பாஜகவைத் தோற்கடித்தனர். ஆந்திராவிலும் அவர்களுக்கு எந்த பிரதிநிதித்துவமும் இல்லை. அதனால் அவர்கள் (பாஜக) தென்மாநில மக்களுடன் கணக்கு தீர்க்க விரும்புகின்றனர். இது ஓர் அரசியல் பழிவாங்கல்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்தச் சதிகளுக்கு எதிராக விவாதம் நடத்த ஒரு முன்னெடுப்பை துவக்கியுள்ளார். அதற்காக ஒரு கூட்டத்தை ஒருங்கிணைத்துள்ளார். காங்கிரஸ் கட்சி கொள்கையளவில் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள முடிவெடுத்துள்ளது. நான் கட்சி உயர்மட்டத்தில் அனுமதி பெற வேண்டும். அதன் பின்பு நிச்சயம் கூட்டத்தில் கலந்துகொள்வேன்" என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x