Published : 11 Mar 2025 04:29 PM
Last Updated : 11 Mar 2025 04:29 PM

“இந்தியா அல்ல... பாரதம் என்றே அழைக்க வேண்டும்” - நாட்டின் பெயரை மாற்ற ஆர்எஸ்எஸ் வலியுறுத்தல்

தத்தாத்ரேய ஹொசபலே | கோப்புப் படம்

புதுடெல்லி: நமது நாட்டுக்கு பாரதம் என்பது பெயர் எனும்போது அதனை அப்படி மட்டுமே அழைக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹொசபலே தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய தத்தாத்ரேய ஹொசபலே, "நமது நாட்டின் பெயர் பாரதம் எனும்போது, அந்த பெயரைக் கொண்டே நமது நாடு அழைக்கப்பட வேண்டும். சமீபத்தில் குடியரசு தலைவர் மாளிகையில் நடந்த ஜி20 உச்சிமாநாட்டின் இரவு விருந்துக்கான அரசு அழைப்பிதழில் பாரத குடியரசு தலைவர் (President of Bharat) என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. ஆங்கிலத்திலும் அப்படியே குறிப்பிடப்பட்டிருந்தது.

ஏனெனில், இந்தியா என்பது ஆங்கிலப் பெயர். பிரிட்டிஷ் ஆட்சியின்போது வழங்கப்பட்ட காலனித்துவப் பெயரான இந்தியா என்பதற்குப் பதிலாக பாரதம் என்றே அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ), இந்திய அரசியலமைப்பு போன்ற நிறுவனங்கள் ஏன் இன்னமும் ‘இந்தியா’வை பயன்படுத்துகின்றன. இது அவசியமா?

பிரிட்டிஷ் ஆட்சி மக்களின் மனதில் ஆழமான முத்திரையை பதித்துள்ளது. இது இன்றுவரை அவர்களின் உணர்வை வடிவமைத்து வருகிறது. மனதில் இருந்து காலனித்துவ பதிவுகளை நீக்கம் செய்ய வேண்டும். இந்த இரட்டைத்தன்மை குறித்து பொதுமக்கள் கேள்வி கேட்க வேண்டும்.

முகலாயர்கள் பாரதத்தின் மீது படையெடுத்து நாட்டின் கோயில்கள் மற்றும் குருகுலங்களை அழித்தார்கள். அவர்கள் இந்தியாவின் பண்டைய கலாச்சாரத்தை அழித்து மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தினர். இருப்பினும், அது ஆங்கிலேயர்களைப் போல நம்மை தாழ்ந்தவர்களாக உணர வைக்கவில்லை. பிரிட்டிஷ் ஆட்சி, அவர்கள் நம்மை விட சிறந்தவர்கள் என்று உணர வைத்தது.

இடதுசாரி தாராளவாதிகள் முன்வைத்த வரலாற்றுக் கதைகள், கடந்த கால பாரத ஆட்சியாளர்களை ஒடுக்குபவர்களாகக் காட்டியது. எனவேதான், அவற்றை தவறு என நாம் கூறுகிறோம். அறிவுசார் மறுசீரமைப்பு மிகவும் அவசியம். இதில், நாடு முழுவதும் ஒரு புதிய அலை வீச வேண்டும். அது மற்ற நாடுகளை இழிவுபடுத்துவதாகவோ அல்லது குறைத்து மதிப்பிடுவதாகவோ இருக்கக் கூடாது. ஆனால் நமது அடையாளத்தை மீட்டெடுக்க உதவும். மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும், முன்மாதிரியாக வாழ வேண்டும். பாரதம் உலகளாவிய நன்மைக்காக மட்டுமே எப்போதும் நிற்கும்" என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x