Published : 11 Mar 2025 01:55 PM
Last Updated : 11 Mar 2025 01:55 PM
புவனேஸ்வர்(ஒடிசா): நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக சென்னையில் நடக்க உள்ள கூட்டத்தில் பிஜு ஜனதா தள கட்சித் தலைவரும் ஒடிசா முன்னாள் முதல்வருமான நவீன் பட்நாயக் பங்கேற்க உறுதி அளித்துள்ளதாக திமுக எம்பி தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக ஆதரவு திரட்டுவதற்காக பிஜு ஜனதா தள கட்சித் தலைவர் நவீன் பட்நாயக்கை, தமிழக அமைச்சர் டிஆர்பி ராஜா, திமுக எம்பி தயாநிதி மாறன் ஆகியோர் ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் இன்று (செவ்வாய்கிழமை) சந்தித்தனர். அப்போது, நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக சென்னையில் நடக்க உள்ள கூட்டத்தில் பங்கேற்க நவீன் பட்நாயக்குக்கு முதல்வர் மு.க. ஸ்டாலினின் அழைப்புக் கடிதத்தை அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தயாநிதி மாறன், “இது ஒரு அழகான சந்திப்பு. நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக மார்ச் 22 ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ள கூட்டத்தில் கலந்து கொள்ள நவீன் பட்நாயக்கை முறையாக அழைப்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பாக நாங்கள் இங்கு வந்துள்ளோம். நீண்ட நேரம் அவருடன் பேசியது மகிழ்ச்சியாக இருந்தது.
அவர் எங்கள் கவலைகளைப் பகிர்ந்து கொள்கிறார். நியாயமற்ற எல்லை நிர்ணயம் நமது மாநிலங்களுக்கு நல்லதல்ல என்று அவர் அஞ்சுகிறார். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, பஞ்சாப், ஒடிசா ஆகிய 7 மாநிலங்களும் நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை காரணமாக நேரடியாக பாதிக்கப்பட உள்ளன. நாடாளுமன்றத்தில் எங்கள் பங்கு குறைக்கப்படும். வட மாநிலங்களின் பங்கு அதிகரிக்கும். இந்த மாநிலங்கள் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் வளரும் மாநிலங்கள். அதற்காக நாம் ஒரு விலையை கொடுக்க நேரிடும். மார்ச் 22 அன்று நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்வதாக அவர் கூறியுள்ளார். அவர் எங்களுடன் போராடுவார்.” என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT