Published : 11 Mar 2025 05:52 AM
Last Updated : 11 Mar 2025 05:52 AM

தமிழக மக்களை அவமானப்படுத்துகிறீர்கள் - தர்மேந்திர பிரதானுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நாவடக்கம் வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவையில், பட்ஜெட் மீதான விவாதத்தின்போது, மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசும்போது, திமுக எம்.பி.க்களை ஜனநாயகம் இல்லாதவர்கள், அநாகரீகமானவர்கள், மாணவர்கள் நலனில் அக்கறை இல்லாதவர்கள். தமிழக மக்களிடம் நேர்மையாக இல்லை என்றும் பேசினார். இதுதவிர, கடந்தாண்டு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதிய கடிதம் மற்றும் கனிமொழி எம்.பி.யுடனான சந்திப்பு தொடர்பாகவும் கருத்து தெரிவித்திருந்தார்.

மத்திய அமைச்சரின் இந்த பேச்சுக்கு கண்டனக்குரல்கள் எழுந்துள்ளன. தர்மேந்திர பிரதான் பேச்சை கண்டித்து வெளிநடப்பு செய்த திமுக எம்.பி.க்கள், பிரதானுக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடந்தாண்டு ஆகஸ்ட் 30-ம் தேதி தனக்கு எழுதிய கடிதத்தை பதிவிட்டு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது: தன்னை மன்னரென எண்ணிக் கொண்டு ஆணவத்துடன் பேசும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நாவடக்கம் வேண்டும். தமிழகத்தின் நிதியைத் தராமல் ஏமாற்றும் நீங்கள் தமிழக எம்.பி.க்களைப் பார்த்து அநாகரிகமானவர்கள் என்பதா. தமிழக மக்களை அவமானப்படுத்துகிறீர்கள். பிரதமர் நரேந்திர மோடி இதனை ஏற்கிறாரா, தேசிய கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கையைத் தமிழக அரசு அனுப்பிய பிஎம் ஸ்ரீ புரி்ந்துணர்வு ஒப்பந்தம் முற்றிலுமாக நிராகரித்து விட்டது என எனக்குக் கடிதம் எழுதியது நீங்கள் தானே?

பிரதான் அவர்களே, நாங்கள் மக்களின் எண்ணங்களுக்கு மட்டுமே மதிப்பளித்துச் செயல்படுகிறோம். உங்களைப் போல நாக்பூரின் சொற்களுக்குக் கட்டுப்பட்டு அல்ல. நாங்கள் உங்கள் திட்டத்தைச் செயல்படுத்த முன்வரவும் இல்லை, அப்படி முன்வராத என்னை யாரும் வற்புறுத்தவும் முடியாது. தமிழக மாணவர்களுக்குரிய நிதியை, எங்களிடம் இருந்து வசூல் செய்த வரியை விடுவிக்க முடியுமா முடியாதா என்பதற்கு மட்டும் பதில் கூறுங்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x