Published : 10 Mar 2025 12:31 PM
Last Updated : 10 Mar 2025 12:31 PM

“பிஎம் ஸ்ரீ திட்டத்தில் தமிழக அரசு யு டர்ன்” - திமுக எம்.பி.க்கு அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில்

புதுடெல்லி: பிம் ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு ஒப்புக்கொண்டது. இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட தயாராக இருந்தது. ஆனால், ஒரு கட்டத்தில் அது தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு அரசியல் செய்து வருகிறது என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் குற்றம் சாட்டியுள்ளார்.

தேசிய கல்விக் கொள்கையை ஏற்று செயல்படும் மத்திய, மாநில, யூனியன் பிரதேச, உள்ளாட்சி அமைப்புகளால் செயல்படுத்தப்படக்கூடிய பள்ளிகளுக்கு நிதி உதவி அளிக்கும் பிஎம் ஸ்ரீ திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் பள்ளிகள், மாதிரி பள்ளிகளாக உருவெடுக்கும் நோக்கில் மத்திய அரசு நிதி உதவி வழங்குகிறது.

ரூ. 27,360 கோடி மதிப்பிலான இத்திட்டத்துக்கு மத்திய அரசு நேரடியாக ரூ.18,128 கோடியை வழங்குகிறது. பள்ளிகளில் மாணவர்கள் ஆர்வத்துடன் படிப்பதற்குத் தேவையான உபரணங்கள், விளையாட்டுப் பொருட்கள், அறிவியல் ஆய்வகங்கள், ஸ்மார்ட் வகுப்பறைகள், கணினி ஆய்வகங்கள், விளையாட்டு மைதானம் போன்றவற்றை ஏற்படுத்த இந்த நிதி தொகுப்பு வழங்கப்படுகிறது.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்டம் இன்று (மார்ச் 10) தொடங்கிய நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி எழுப்பினார். “பிரதமர் ஸ்ரீ திட்டத்தில் தமிழகத்துக்காக ரூ.2,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பல மாநிலங்கள் இந்த நிதியை பெற்றுள்ளன. நாங்கள் தேசிய கல்விக் கொள்கையை பின்பற்றாததால் எங்களுக்கு இந்த நிதி மறுக்கப்படுகிறது. மாநிலங்களை பழிவாங்க பள்ளி மாணவர்களுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுவது சரியா? மத்திய அரசின் இந்தச் செயல், பள்ளி மாணவர்களின் கல்வியை பாதிக்கிறது. எனவே, கட்டாயமற்ற மத்திய அரசின் சட்டத்தை பின்பற்றாததால், நிதி வழங்க மறுப்பது கூடாது. எந்த ஒரு மாநிலமும் இதுபோல் நிதி இழப்பை சந்திக்காத நிலையை மத்திய அரசு உருவாக்குமா?” என்று திமுக கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், “இன்று மார்ச் 10. இந்த நிதி ஆண்டு முடிய இன்னும் 20 நாட்கள் இருக்கின்றன. பிஎம் ஸ்ரீ திட்டம் தொடர்பாக கடந்த காலங்களில் நாங்கள் தமிழ்நாடு அரசோடு விவாதங்களை நடத்தி இருக்கிறோம்.

அப்போது, பிஎம் ஸ்ரீ திட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த தமிழக அரசு மத்திய அரசோடு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட தயாராக இருந்தது. தமிழக கல்வி அமைச்சரோடு வந்து தமிழகத்தைச் சேர்ந்த எம்பிக்கள் இது தொடர்பாக என்னை சந்தித்துப் பேசினார்கள். தற்போது கேள்வி எழுப்பி இருக்கும் எம்பியும் என்னை சந்தித்தார். புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்த ஒப்புக்கொண்டுவிட்டு சென்ற அவர்கள் பின்னர் யு டர்ன் அடித்துவிட்டார்கள். தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு பிரச்சினை செய்கிறார்கள்.

மாநில அரசு மீண்டும் எங்களோடு பேசலாம். நாங்கள் பேசுவதற்கு தயாராக இருக்கிறோம். நாட்டில் பாஜக ஆளாத பல மாநிலங்கள் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டிருக்கின்றன. காங்கிரஸ் ஆளும் கர்நாடகா இதற்கு ஒரு உதாரணம். அவர்கள் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டு பிஎம் ஸ்ரீ திட்டத்தின் கீழ் நிதி பெறுகிறார்கள். இதேபோல், ஹிமாச்சலப் பிரதேச மாநிலமும் பிஎம் ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

தமிழக அரசை பொறுத்தவரை, அவர்கள் தமிழக மாணவர்கள் விஷயத்தில் பொறுப்பாக இல்லை; நேர்மையாக இல்லை; ஜனநாயக முறைப்படி செயல்படவில்லை; அவர்கள் நல்ல நாகரீகத்தில் இல்லை. அவர்கள் உறுதிமொழி கொடுத்திருக்கிறார்கள். தற்போது மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும்படி செயல்படுகிறார்கள். மொழியை வைத்துக்கொண்டு அவர்கள் விளையாடுகிறார்கள். அவர்கள் மாணவர்களுக்கு அநீதி இழைக்கிறார்கள். மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்குகிறார்கள்.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்பது தொடர்பாக அவர்கள் எந்த தேதியில் என்னை சந்தித்தார்கள் என்பதை என்னால் சொல்ல முடியும். முதல்வர் ஸ்டாலின் இதை ஏற்க தயாராக இருந்தார். அவரது சகோதரி கனிமொழி இங்கே இருக்கிறார். தமிழக மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை அவர்கள் உறுதி செய்ய வேண்டும். அவர்கள் நியாயமற்ற முறையில் செயல்படக்கூடாது.” என தெரிவித்தார்.

அமைச்சர் தர்மேந்திர பிரதானின் உரையின்போது எதிர்ப்பு தெரிவித்த திமுக எம்பிக்கள், அவையின் மையப்பகுதிக்கு வந்து கோஷங்களை எழுப்பினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x