Published : 08 Mar 2025 03:34 PM
Last Updated : 08 Mar 2025 03:34 PM
சென்னை: இந்தியாவின் எந்த மாநிலமும் மும்மொழி கொள்கையை செயல்படுத்தவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தற்போது இரு மொழி கொள்கை மற்றும் மும்மொழி கொள்கை இடையே தீவிர விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆளும் திமுக, தமிழ்நாட்டில் இரு மொழி கொள்கையே உறுதியாக பின்பற்றப்படும் என கூறி வருகிறது. திமுகவின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் இருக்கின்றன.
அதேநேரத்தில், புதிய கல்விக் கொள்கையை பின்பற்றி தமிழ்நாடு மும்மொழிக் கொள்கையை பின்பற்ற வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள சிபிஎஸ்இ பாடத்திட்டத்திலும், தனியார் பள்ளிகள் நடத்தும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளிலும் மும்மொழி கொள்கை அமல்படுத்தப்படுவதை சுட்டிக்காட்டும் பாஜக, அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் ஏன் 3-வது மொழி மறுக்கப்பட வேண்டும் என்று கேள்வி எழுப்பி வருகிறது. மாணவர்கள் அனைவருக்கும் சமமான கல்வி வழங்கப்பட வேண்டும் என்று அது வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இது குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ள ப.சிதம்பரம், “மூன்று மொழிகள் கற்பிக்கப்பட வேண்டும் என சொல்லப்படும் இந்த நேரத்தில், நான் ஒரு விஷயத்தை மிகவும் துணிச்சலாக சொல்வேன். இந்தியாவில் எந்த மாநிலமும் மும்மொழிக் கொள்கையை செயல்படுத்தவில்லை. குறிப்பாக இந்தி பேசும் மாநிலங்களில், ஒரு மொழி கொள்கைதான் பயன்பாட்டில் இருக்கிறது. இந்த மாநிலங்களில் பொதுவான மொழியாகவும், அலுவல் மொழியாகவும், பயிற்றுவிக்கும் மொழியாகவும் இந்திதான் இருக்கிறது.
கூடுதாக வேறு ஒரு கற்பிக்கப்படுகிறது என்றால் அது சமஸ்கிருதம்தான். இது இந்தியுடன் நெருங்கிய தொடர்புடையது. தமிழ் அல்லது தெலுங்கு பேசும் ஆசிரியர்கள் ஒருபுறம் இருக்கட்டும், ஆங்கிலம் பேசும் ஆசிரியர்களே மிகச் சில அரசுப் பள்ளிகளில்தான் உள்ளனர்.
தமிழ்நாட்டில், மத்திய அரசு நடத்தும் 52 கேந்திரிய வித்யாலயாக்கள் உள்ளன. அங்கு பயிற்று மொழி ஆங்கிலம். அதோடு, இந்தி அல்லது சமஸ்கிருதம் இரண்டில் ஒன்றை இப்பள்ளிகள் கற்பிக்கின்றன. அவர்கள் தமிழ் மொழியை கூட கற்பிப்பது கிடையாது. மத்திய அரசு நடத்தும் கேந்திரிய வித்யாலயாவில் மும்மொழிக் கொள்கை கிடையாது.
தமிழ்நாட்டில் கடந்த 60 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து வரும் கட்சிகள் இருமொழி கொள்கையை ஏற்றுக்கொண்டு செயல்படுத்தி வருகின்றன. தமிழ்நாட்டில் தமிழ் பயிற்று மொழியாக உள்ளது. இரண்டாவது மொழியாக ஆங்கிலம் உள்ளது.
அதேநேரத்தில், ஏராளமான தனியார் பள்ளிகளில் இந்தி கற்பிக்கப்படுகிறது. சிபிஎஸ்இ பள்ளிகள், ஐசிஎஸ்இ பள்ளிகளில் இந்தி கற்பிக்கப்படுகிறது. இந்தி படிப்பதில் இருந்து எந்த ஒரு குழந்தையும் தடுக்கப்படவில்லை. அதுமட்டுமல்ல, கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு முன்பு மகாத்மா காந்தியால் நிறுவப்பட்ட புகழ்பெற்ற 'தக்ஷின் பாரத் இந்தி பிரச்சார சபா' உள்ளது. இதன்மூலம், லட்சக்கணக்கான மாணவர்கள் தாமாக முன்வந்து இந்தி படித்து பல்வேறு தேர்வுகளில் தேர்ச்சி பெறுகின்றனர். எனவே, ஒரு குழந்தை இந்தி படிக்க விரும்பினாலும் படிக்க முடியாது என்ற நிலை இல்லை.
இங்கே எதிர்ப்பு எங்கே எழுகிறது என்றால், அரசு பள்ளிகளில் இரண்டு மொழிகள் கற்பிக்கப்படுவதில்தான். நான் இன்னும் முன்னோக்கிச் சென்று கூற விரும்புவது என்னவென்றால், இரு மொழியைக்கூட நாம் சரியாக சொல்லிக் கொடுப்பதில்லை. கிராமப்புற குழந்தைகள், நகர்ப்புறங்களில் ஏழ்மை பின்னணி உள்ள குழந்தைகளில் எவ்வளவு பேருக்கு ஆங்கிலம் நன்றாக வருகிறது.
நான் நூற்றுக்கணக்கானோரை சந்திக்கிறேன். அவர்கள் ஆங்கிலம் படிக்கிறார்கள். ஆனால், அவர்களால் ஆங்கிலத்தில் பேச, எழுத முடிவதில்லை. எனவே, இருமொழிக் கெள்கை இருப்பது நல்லது. அந்த இரு மொழிக் கொள்கையை வெற்றிகரமானதாக மாற்ற வேண்டும். ஆங்கிலம் வெற்றிகரமாக கற்பிக்கப்பட வேண்டும். புதிய கல்விக் கொள்கையில் இரண்டாவது மொழியாக ஆங்கிலம் ஏற்கப்பட்டுள்ளது. எனவே, மூன்றாவது மொழி பற்றி பேசுவதற்கு முன் ஆங்கிலத்தை வெற்றிகரமாக கற்பிப்பது முக்கியம்.” என தெரிவித்துள்ளார்.
தொகுதி மறுவரையறை குறித்த கேள்விக்கு பதில் அளித்த ப. சிதம்பரம், “2026=க்குப் பிறகு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டால், அது தொகுதி மறுசீரமைப்பிற்கு வழிவகுக்கும். தொகுதி மறுசீரமைப்பு வரும்போது, ஒவ்வொரு மாநிலத்திற்குமான மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை முடிவாகும். எங்கள் கணக்கீட்டின்படி, மாநிலங்களின் தற்போதைய மக்கள் தொகைக்கு ஏற்ப மறுபகிர்வு செய்யப்பட்டால், 129 நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்ட நமது தென் மாநிலங்கள் 103 நாடாளுமன்றத் தொகுதிகளாகக் குறையும்.
5 தென் மாநிலங்கள் 26 இடங்களை இழக்கும். அதே நேரத்தில் மக்கள் தொகை அதிகம் கொண்ட மாநிலங்கள், குறிப்பாக உ.பி., பீகார், ம.பி. மற்றும் ராஜஸ்தான் அதிக தொகுதிகளைப் பெறும். தென் மாநிலங்கள் தங்கள் மக்கள்தொகை விகிதத்தை குறைத்துள்ளன. வட மாநிலங்கள் இன்னும் அதனைச் செய்யவில்லை. இதை நான் குறையாக கூறவில்லை. வட மாநிலங்கள் அவ்வாறு செய்ய இன்னும் 10-15 ஆண்டுகள் ஆகும்.
129 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளபோதே, எங்கள் குரல்கள் நாடாளுமன்றத்தில் கேட்கப்படவில்லை. அது 103 ஆக குறைந்தால், நிலைமை மோசமாக இருக்கும். தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்படுவதை நாங்கள் எதிர்க்கிறோம். அதேநேரத்தில், வேறு வழிகளை முன்வைத்தால் அவற்றை நாங்கள் பரிசீலிப்போம்.” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT