Last Updated : 05 Mar, 2025 09:00 PM

 

Published : 05 Mar 2025 09:00 PM
Last Updated : 05 Mar 2025 09:00 PM

“உ.பி அரசின் கடன் ரூ.9 லட்சம் கோடி... தோல்விகளை மறைக்க பொய் கூறுகிறது பாஜக!” - அகிலேஷ் விமர்சனம்

அகிலேஷ் யாதவ் | கோப்புப்படம்

புதுடெல்லி: “உத்தரப் பிரதேச அரசின் தோல்விகளை மறைக்க பாஜக பொய்களைக் கூறுகிறது,” என்று சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார். மேலும், உத்தரப் பிரதேசம் 9 லட்சம் கோடி ரூபாய் கடனில் சிக்கியுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அகிலேஷ் யாதவ் இன்று (மார்ச் 5) வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாஜக அரசாங்கத்தின் கீழ் கல்வி மற்றும் சுகாதார அமைப்புகள் சீரழிந்துவிட்டன. சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. பட்ஜெட் எட்டு ஆண்டுகளாக கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. வளர்ச்சிப் பணிகள் முடங்கியுள்ளன. விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், தொழிலதிபர்கள் அனைவரும் கவலைப்படுகிறார்கள்.

அரசாங்கம் அனைத்துத் துறைகளிலும் முற்றிலுமாக தோல்வியடைந்துள்ளது. பாஜக தனது தோல்விகளை மறைக்க பொய் சொல்வதைத் தவிர வேறு வழியில்லை. பாஜக அரசின் செயல்பாடுகள் மற்றும் கொள்கைகளால் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் சிரமப்படுகிறார்கள். விவசாயிகள் தங்கள் பயிர்களுக்கு துவக்கக் காலத்திலேயே உரங்கள், விதைகள் மற்றும் பூச்சிக்கொல்லிகளைப் பெற முடியவில்லை. பயிர்கள் சாகுபடிக்குப் பின் சந்தையில் விற்பனைக்கு செல்லும்போது அங்கு அதற்கு, சரியான விலை கிடைப்பதில்லை.

கரும்பு, உருளைக் கிழங்கு, கோதுமை போன்ற அனைத்து பயிர்களை பயிரிட்டுள்ள விவசாயிகளும் கவலைப்படுகிறார்கள். பாஜக அரசாங்கத்தின் கீழ் பணவீக்கம் உச்சத்தில் உள்ளது. இடைத்தரகர்கள் லாபம் ஈட்டுகிறார்கள். அரசாங்கமே லாப வெறியையும், பணவீக்கத்தையும் ஊக்குவிக்கிறது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. ஒவ்வொரு கிராமத்திலும், நகரத்திலும் படித்த வேலையற்ற இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு முன்பு மாநிலத்தில் இவ்வளவு வேலையின்மை இருந்ததில்லை.

ஒருபுறம், அதிகரித்து வரும் பணவீக்கமும் மறுபுறம், வரலாறு காணாத அளவை எட்டிய வேலையின்மையும் அனைவரையும் பேரழிவுக்கு உட்படுத்தியுள்ளது. பாஜக அரசின் தவறான ஜி.எஸ்.டி. வரிவிதிப்பால் வர்த்தகர்கள் சிரமப்படுகிறார்கள். பாஜக அரசு, தொழிலதிபர்களிடம் சோதனைகள் நடத்தி அவர்களை துன்புறுத்துகிறது. பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களில் உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. காவல்நிலைய மரணங்களிலும் முதலிடத்தில் உள்ளது.

ஆளும் பாஜக அரசு நம் மாநிலத்தை கடனில் ஆழ்த்தியுள்ளது. உத்தரப் பிரதேசம் 9 லட்சம் கோடி ரூபாய் கடனில் சிக்கியுள்ளது. பாஜக அரசாங்கத்தின் கீழ், மாநிலத்தில் தனிநபர் கடன் ரூ.36 ஆயிரத்தை எட்டியுள்ளது. மாநிலத்தின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு முதல்வரிடம் பதில் இல்லை. முதலீடு என்ற பெயரில் அரசாங்கம் பொய் சொல்கிறது. 45 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டதாக அரசாங்கம் கூறுகிறது. ஆனால், எந்த முதலீடும் உண்மையில் தரையில் தெரியவில்லை. முதலீடு என்ற பெயரில் போலி முதலீட்டாளர்கள் பிடிபடுகிறார்கள். சமாஜ்வாதி அரசாங்கத்தின் போது, மாநிலத்தின் வளர்ச்சிக்காக விரைவுச் சாலைகள், மெட்ரோ ரயில், பூங்காக்கள், ஆற்றங்கரை, மருத்துவக் கல்லூரி, புற்றுநோய் மருத்துவமனை, மருத்துவமனை, நான்கு வழிச் சாலைகள் கட்டப்பட்டன.

வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புக்காக ஐ.டி நகரம், பெண்கள் பாதுகாப்புக்காக 1090 மகளிர் உதவி எண் தொடங்கப்பட்டது. நோயாளிகளை மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல 102, 108 ஆம்புலன்ஸ் சேவைகள் தொடங்கப்பட்டன. சர்வதேச அளவிலான எகோனா கிரிக்கெட் மைதானம் கட்டப்பட்டது. சட்டம் - ஒழுங்கை மேம்படுத்த டயல் 100 சேவை தொடங்கப்பட்டது. ஆக்ரா - லக்னோ விரைவுச் சாலையில் விவசாயிகளுக்காக தானியங்கள், உருளைக்கிழங்கு மற்றும் பிற பயிர்களுக்கான சந்தை கட்டப்பட்டது.பாஜக அரசு கடந்த எட்டு ஆண்டுகளில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து பொதுமக்களை தவறாக வழிநடத்துவதைத் தவிர வேறு எந்த குறிப்பிடத்தக்க வளர்ச்சிப் பணிகளையும் செய்யவில்லை,” என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x