Published : 04 Mar 2025 06:49 PM
Last Updated : 04 Mar 2025 06:49 PM
பாட்னா: தனது தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, பிஹாரில் அடிக்கடி நிகழ்ந்து வந்த இந்து - முஸ்லிம் மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக கூறினார்.
பிஹார் சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பதிலளித்துப் பேசிய முதல்வர் நிதிஷ் குமார், "2005-இல் நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு சட்டம் - ஒழுங்கு நிலைமை மிகவும் பரிதாபகரமானதாக இருந்தது. சூரியன் மறைந்துவிட்டால் தங்கள் வீடுகளை விட்டு வெளியே செல்லவே மக்கள் அஞ்சினார்கள். சாலைகளும் மோசமாக இருந்ததால், பயணங்கள் மிகவும் கடினமாக இருந்தன" என்று கூறினார்.
அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள், முதல்வரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். இதனால், கோபமடைந்த நிதிஷ் குமார், "அந்த காலத்தில் நீங்கள் குழந்தைகள்தான். தற்போது எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் தேஜஸ்வி யாதவும் ஒரு குழந்தைதான். அப்போது விஷயங்கள் எவ்வளவு மோசமாக இருந்தன என்பதை நீங்கள் அறிய விரும்பினால் பத்திரிகையாளர்களிடம் கேளுங்கள்" என்று பத்திரிகையாளர் கேலரியை சுட்டிக்காட்டி பேசினார்.
ஆர்ஜேடி - காங்கிரஸ் கூட்டணியை மறைமுகமாக விமர்சித்த நிதிஷ் குமார், "முன்பு இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான தொடர் மோதல்களால் மாநிலம் பாதிக்கப்பட்டிருந்தது. முஸ்லிம் வாக்குகளைப் பெற்றவர்களால் இதற்கு ஒருபோதும் முற்றுப்புள்ளி வைக்க முடியாது.
நான் பொறுப்பேற்றபோது, முஸ்லிம் சமுதாயத்தின் கல்லறைகளுக்கு (கப்ரிஸ்தான்) ஒதுக்கப்பட்ட நிலம் தொடர்பான தகராறுகள் ஒரு முக்கிய காரணியாக அடையாளம் காணப்பட்டன. எனவே, ஆயிரக்கணக்கான கல்லறைகளுக்கு வேலி அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. முழு செலவையும் அரசாங்கமே ஏற்றுக்கொண்டது. 1989-ல் நடந்த பாகல்பூர் கலவரத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் அனைவரையும் அரசாங்கம் நீதியின் முன் நிறுத்தியது. இத்தகைய நடவடிக்கைகளின் மூலம், இந்து - முஸ்லிம் மோதல்களுக்கு அரசாங்கம் முற்றுப்புள்ளி வைத்தது" என்று கூறினார்.
முதல்வரின் உரையைக் கண்டித்து எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். இதையடுத்துப் பேசிய முதல்வர் நிதிஷ் குமார், "தேர்தல்களுக்குப் பிறகு, நாங்கள் திரும்பி வருவோம். வரும் தேர்தலில் அவர்கள் காணாமல் போவார்கள். அவர்கள் எதையும் அறியாமலும் புரிந்து கொள்ளாமலும் ஓடிவிட்டனர். நாங்கள் (பாஜக - ஐக்கிய ஜனதா தளம்) மீண்டும் ஒன்றாக இருக்கிறோம், அப்படியே இருப்போம்" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT