Published : 03 Mar 2025 06:50 PM
Last Updated : 03 Mar 2025 06:50 PM
லக்னோ: பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் தேசிய ஒருங்கிணைப்பாளரும், தனது தம்பியின் மகனுமான ஆகாஷ் ஆனந்தை கட்சியில் இருந்து நீக்குவதாக மாயாவதி அறிவித்துள்ளார்.
மாயாவதியின் தம்பி ஆனந்த் குமாரின் மகனான ஆகாஷ் ஆனந்த், பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக இருந்து வந்தார். மேலும், தனது அரசியல் வாரிசாக ஆகாஷ் ஆனந்த்தை மாயாவதி அறிவித்திருந்தார். இந்நிலையில், தேசிய ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்தும், அரசியல் வாரிசு என்ற தகுதியில் இருந்தும் ஆகாஷ் ஆனந்த் நீக்கப்படுவதாக மாயாவதி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவித்தார். அதோடு, தம்பி ஆனந்த் குமாரையும் கட்சியின் மூத்த தலைவர் ராம்ஜி கவுதமையும் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர்களாக மாயாவதி அறிவித்தார். அவரது இந்த திடீர் அறிவிப்பு கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதையடுத்து, தான் கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டது குறித்து ஆகாஷ் ஆனந்த் இன்று (திங்கள்கிழமை) தனது எக்ஸ் பக்கத்தில் தனது கருத்தை பதிவிட்டிருந்தார். இந்த பதிவால் கோபமடைந்த மாயாவதி, அவரை கட்சியில் இருந்தே நீக்குவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக மாயாவதி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவுகளில், "நேற்று நடைபெற்ற பகுஜன் சமாஜ் கட்சியின் அகில இந்தியக் கூட்டத்தில், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அசோக் சித்தார்த்தின் (ஆகாஷ் ஆனந்த்தின் மாமனார்) சொல்படி ஆகாஷ் ஆனந்த் செயல்பட்டு வந்ததால், தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவி உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் அவர் விடுவிக்கப்பட்டார். இதற்காக அவர் மனந்திரும்பி தனது முதிர்ச்சியைக் காட்டி இருக்க வேண்டும்.
ஆனால், அதற்கு நேர்மாறாக, ஆகாஷ் ஆனந்த் அளித்த நீண்ட பதில் அவரது வருத்தத்தின் அறிகுறியாகவும், அரசியல் முதிர்ச்சியின் அறிகுறியாகவும் இருக்கவில்லை. மாறாக அவர் சுயநலவாதியாகவும், திமிர்பிடித்தவராகவும், அவரது மாமனாரின் செல்வாக்கின் கீழ் செயல்படுபவராகவும் இருப்பதையே காட்டியது. அவரைத் தவிர்க்குமாறு கட்சியில் உள்ள அனைவரையும் நான் அறிவுறுத்தி வருகிறேன், மேலும் அவர்களைத் தண்டிக்கவும் செய்கிறேன்.
நாம் மிகவும் மதிக்கும் பாபா சாகேப் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கரின் சுயமரியாதை இயக்கத்தின் நலனுக்காகவும், மதிப்புக்குரிய கன்ஷிராமின் ஒழுக்க மரபைப் பின்பற்றியும் ஆகாஷ் ஆனந்த், அவரது மாமனாரைப் போலவே, கட்சி மற்றும் இயக்கத்தின் நலனுக்காக கட்சியிலிருந்து நீக்கப்படுகிறார்" என மாயாவதி தெரிவித்துள்ளார். கட்சியில் இருந்து நீக்கப்படுவதற்கு முன் ஆகாஷ் ஆனந்த் வெளியிட்ட பதிவு: “மாயாவதி முடிவை மதிக்கிறேன்” - கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட ஆகாஷ் ஆனந்த் ரியாக்ஷன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT