Published : 03 Mar 2025 06:23 PM
Last Updated : 03 Mar 2025 06:23 PM

“மன்மோகன் ஆட்சியில் காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க இந்தியா, பாக். நெருங்கின, ஆனால்...” - உமர் அப்துல்லா

ஜம்மு: “மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண இந்தியாவும் பாகிஸ்தானும் நெருக்கமாக வந்தன. ஆனால், அந்த நிலைமைக்கு என் வாழ்நாளில் நாம் மீண்டும் திரும்புவோம் என நான் கருதவில்லை” என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கிய நிலையில், மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோருக்கு அவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் அமைச்சர் சையத் குலாம் உசேன் கிலானி, முன்னாள் மாநிலங்களவை எம்பி ஷம்ஷேர் சிங் மன்ஹாஸ், முன்னாள் எம்எல்ஏக்கள் குலாம் ஹசன் பாரே, சவுத்ரி பியாரா சிங் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சட்டமன்றம் இரண்டு நிமிட மவுன அஞ்சலி செலுத்தியது.

மன்மோகன் சிங்கின் மறைவை ஒட்டி அவருக்கு புகழஞ்சலி செலுத்திய முதல்வர் உமர் அப்துல்லா, “தற்போது பாகிஸ்தானில் உள்ள ஒரு கிராமத்திலிருந்து இந்தியாவின் பிரதமராக உயர்ந்தவர் மன்மோகன் சிங். தனியார் துறை சீர்திருத்தம் மற்றும் சமூக நல திட்டங்கள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியதன் மூலம், நாட்டை ஒரு பொருளாதார சக்தியாக மாற்றுவதில் அவர் சிறப்பான பங்களிப்பை வழங்கினார். பாகிஸ்தான் உடனான பிரச்சினைக்குத் தீர்வு காண அவர் முயன்றார். இந்த முயற்சியை அவர் தொடங்கவில்லை. தொடங்கியவர் வாஜ்பாய். வாஜ்பாய் எடுத்த முயற்சியை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டிய ஒரு பெரிய பொறுப்பு தனக்கு உள்ளதை அவர் நன்கு அறிந்திருந்தார்.

பயங்கரவாத சம்பவங்களால் நிலைமை மோசமடைந்து வந்த போதிலும், நேர்மையான முயற்சிகளை மேற்கொண்டவர் மன்மோகன் சிங். ஒரு காலகட்டத்தில் இரு நாடுகளும் இந்த (காஷ்மீர்) பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நெருக்கமாகிவிட்டன. ஆனால், அந்த நிலைமைக்கு என் வாழ்நாளில் நாம் மீண்டும் திரும்புவோம் என நான் கருதவில்லை. ஜம்மு மற்றும் காஷ்மீரில் நிரந்தர அமைதிக்கான நிலைமைகளை உருவாக்குவதன் மூலம் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கான முன்முயற்சியாக ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஐந்து பணிக்குழுக்களை மன்மோகன் சிங் அமைத்தார்.

இடம்பெயர்ந்த காஷ்மீரி பண்டிதர்களின் நலனை உறுதிப்படுத்த நடைமுறைக்கு ஏற்ற நடவடிக்கைகள் சிங் தலைமையிலான அரசாங்கத்தால் எடுக்கப்பட்டன. அவர் காஷ்மீர் பண்டிட் சமூகத்துக்கு வேலை வாய்ப்பில் இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தினார். வேறு யாரும் இத்தகைய முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. பண்டிட் சமூகத்துக்காக ஜம்முவில் ஜக்தி டவுன்ஷிப்பை அமைத்து, கூடாரங்களில் வசித்தவர்களுக்கு நிவாரணம் அளித்தார்.

ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையின் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டிருப்பது குறித்து துணைநிலை ஆளுநர் இன்றைய தனது உரையில் குறிப்பிட்டார். இந்த நான்கு வழிச்சாலை திட்டத்தை ஜம்மு - காஷ்மீருக்கு பரிசளித்தவர் மன்மோகன் சிங்தான். காஷ்மீரை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் ரயில்வே திட்டங்களை முன்னெடுத்தவர் மன்மோகன் சிங். உலகின் மிக உயரமான ரயில்வே பாலமான செனாப் பாலத்தின் பணிகள் அவரது காலத்தில்தான் தொடங்கப்பட்டன. துரதிர்ஷ்டவசமாக, பாலத்தில் பயணிக்க அவர் இன்று நம்மிடையே இல்லை. குறைந்தபட்சம், அவர் தொடங்கிய பணி தற்போதைய ஆட்சியால் முடிக்கப்பட்ட திருப்தியாவது அவருக்கு இருக்கும்.

மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட தலைவர் மன்மோகன் சிங். வரலாறு அவரை மிகவும் கருணையுடன் மதிப்பிடும் என்று அவர் கூறியது சரிதான். இந்திய பொருளாதாரத்துக்கான பாதையை வகுத்தளித்தவர் மன்மோகன் சிங். அந்த பாதையில் பயணிப்பதால்தான் நாடு உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாற முடிந்தருக்கிறது" என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x