Published : 03 Mar 2025 05:06 AM
Last Updated : 03 Mar 2025 05:06 AM
ராய்ப்பூர்: ஓராண்டுக்குள் சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் தீவிரவாதம் வேரறுக்கப்படும் என்று சத்தீஸ்கர் போலீஸ் மூத்த அதிகாரி சுந்தரராஜ் தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கரில் தந்தேவாடா, பஸ்தர், பிஜாப்பூர், நாராயண்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் ஆதிக்கம் உள்ளது. சத்தீஸ்கர் காவல் துறையின் மாவட்ட ரிசர்வ் கார்டு, சிறப்பு அதிரடிப்படை, மத்திய அரசின் சிஆர்பிஎப் படையை சேர்ந்த சுமார் 1,000 வீரர்கள் ஒன்றிணைந்து மாவோயிஸ்ட் தீவிரவாதிகளை வேட்டையாடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த சூழலில் சத்தீஸ்கரின் பஸ்தர் பகுதி போலீஸ் ஐஜி சுந்தரராஜ் கூறியதாவது: கடந்த ஆண்டு ஜனவரி முதல் இதுவரை சத்தீஸ்கரில் 310 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தற்போது சுமார் 400 தீவிரவாதிகள் மட்டுமே வனப்பகுதிகளில் பதுங்கி உள்ளனர். அவர்களை வேட்டையாடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மாவோயிஸ்ட் மத்திய குழுவை சேர்ந்த பலர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர்.
அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் தீவிரவாதத்தை ஒழிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி பூண்டுள்ளார். இதன்படி ஓராண்டுக்குள் சத்தீஸ்கர் முழுவதும் மாவோயிஸ்ட் தீவிரவாதம் வேரறுக்கப்படும். மாவோயிஸ்ட் தீவிரவாத அமைப்புகளில் இணைந்திருக்கும் தீவிரவாதிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரண் அடையலாம். அவர்களுக்கான கதவு திறந்து இருக்கிறது. இல்லையெனில் பாதுகாப்பு படை வீரர்களை அவர்கள் நேருக்கு நேர் எதிர்கொள்ள நேரிடும். அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்கு பிறகு சத்தீஸ்கரில் வன்முறையே நடைபெறாது என்பதற்கு உத்தரவாதம் கொடுக்க முடியாது. மாவோயிஸ்ட் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் பாதுகாப்பு படை வீரர்கள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். மக்கள் வளர்ச்சியை விரும்புகின்றனர்.
தங்கள் பகுதிகளில் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் காவல் துறை முக்கிய பங்காற்றி வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளை வேட்டையாடும் பணிக்கு தலைமையேற்று இருக்கும் ஐஜி சுந்தரராஜ், தமிழ்நாட்டின் கோவை மாவட்டம் சரவணம்பட்டியை சேர்ந்தவர் ஆவார். கடந்த 2003-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக பதவியேற்ற அவர் சத்தீஸ்கரில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட அதிதீவிரமாக பணியாற்றி வருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT