Published : 03 Mar 2025 04:43 AM
Last Updated : 03 Mar 2025 04:43 AM
புதுடெல்லி: பருப்பு உற்பத்தியை ஊக்குவித்து இறக்குமதியை குறைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார்.
வேளாண்மை மற்றும் ஊரக வளம் பற்றிய பட்ஜெட்டுக்கு பிந்தைய காணொலிவழி கருத்தரங்கு நேற்று முன்தினம் நடைபெற்றது. துறை சார்ந்த உயர் அதிகாரிகள் பங்கேற்ற இதில் பிரதமர் மோடி பேசியதாவது: வேளாண்மை துறையை மேம்படுத்துதல் மற்றும் கிராமங்களை வளம் பெறச் செய்தல் ஆகிய 2 பெரிய இலக்குகளை எட்டுவதற்காக மத்திய அரசு பாடுபட்டு வருகிறது. எனவே, மத்திய பட்ஜெட்டில் வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாடு தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களை விரைவாக அமல்படுத்த வேண்டும்.
வேளாண் துறையின் திறனை பயன்படுத்திக் கொள்வதற்காக, குறைவான உற்பத்தித் திறன் கொண்ட 100 வேளாண் மாவட்டங்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்தும் வகையில், பிரதமரின் தான் தான்ய கிரிஷி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. நம் நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக பருப்பு உற்பத்தி அதிகரித்துள்ளது. குறிப்பாக பாசி பயறு, கொண்டை கடலை உற்பத்தியில் தன்னிறைவை எட்டி உள்ளோம். ஆனாலும் ஒட்டுமொத்த பருப்பு நுகர்வில் 20% இறக்குமதியை நம்பி இருக்கிறோம். எனவே, துவரை, உளுந்து உள்ளிட்ட இதர பருப்பு வகைகளின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். இதற்காக அதிக மகசூல் தரும் விதைகளை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். கலப்பின வகைகளை பயிரிடுமாறு ஊக்குவிக்க வேண்டியது அவசியம். அதேநேரம், காலநிலை மாற்றம், சந்தை நிச்சயமற்ற தன்மை மற்றும் விலை ஏற்ற இறக்கங்கள் உள்ளிட்ட சவால்களை சமாளிக்க விவசாயிகளுக்கு உதவ வேண்டும். இதன்மூலம் பருப்பு இறக்குமதியை படிப்படியாகக் குறைக்க வேண்டும்.
நம்முடைய வளர்ந்த இந்தியா இலக்கு தெளிவாக உள்ளது. வளர்ச்சியின் முதல் இயந்திரமாகவும் விவசாயிகளுக்கு பெருமை சேர்ப்பதாகவும் வேளாண்மை விளங்குகிறது. எனவே, வளம் மற்றும் அதிகாரம் பெற்ற விவசாயிகளைக் கொண்ட நாடாக இந்தியாவை கட்டமைத்து வருகிறோம். மேலும் விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க, ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கி வருகிறோம். இதற்காக, கடந்த 6 ஆண்டுகளில் ரூ.3.75 லட்சம் கோடியை அவர்களுக்கு வழங்கி உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT