Published : 02 Mar 2025 03:15 PM
Last Updated : 02 Mar 2025 03:15 PM
புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தின் அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்தில் பிளஸ் 1 மாணவர் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார். இப்பல்கலைக்கழக வளாகத்தில் சமீப காலமாக துப்பாக்கிக் கலாச்சாரம் மீண்டும் பெருகுவதாகக் கூறப்படுகிறது.
உத்தரப் பிரதேசம் அலிகர் நகரில், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. சுமார் 150 வருட பழமையான இந்த மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் பள்ளிகளும் உள்ளன. அதில் ஒரு பள்ளியான ஏபிகே யூனியன் பள்ளியில் நேற்று (சனிக்கிழமை) மதியம் ப்ளஸ் 1 பயிலும் மாணவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சகமாணவருடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் அலிகர் சிவில்லைன் காவல்நிலையத்தின் ஆய்வாளர் அபய் பாண்டே கூறுகையில், “அலிகர் பல்கலைக்கழகத்தின் ஏபிகே யூனியன் உயர்நிலைப் பள்ளியின் மாணவர்கள் சிலர் இரண்டு குழுக்களாகி மோதிக் கொண்டனர்.
இதில் துப்பாக்கியுடன் இருந்த ஒரு மாணவர் பிளஸ் 1 பயிலும் முகம்மது ஃகைப் என்ற மாணவனைத் துப்பாக்கியால் சுட்டு விட்டார். இதில் காயமடைந்த ஃகைப்பை வளாகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தும் அவரது உயிர் பிரிந்தது.” எனத் தெரிவித்தார். உயிரிழந்த மாணவன் முகம்மது ஃகைப்பின் தந்தை முகம்மது நையீம், அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் நிர்வாக அலுவலராக பணியாற்றுகிறார். இந்தச் சம்பவம் மதியம் பள்ளி நிறைவடைந்த பின்பு, பள்ளியின் வாசலில் நடந்துள்ளது.
துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிவிட்ட மாணவர்களைப் பிடிக்க மூன்று போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழக நிர்வாகத்திடமிருந்து சிசிடிவி காட்சிகளையும் பெற்று நடவடிக்கை தொடரப்பட உள்ளன.
இதனிடையே அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கி மோதல் மீண்டும் எழத் துவங்கியுள்ளது என்று கூறப்படுகிறது. இதற்குமுன்பு, கடந்த 2024 ஜூலை 24 அன்று பல்கலைக்கழக ஊழியர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் பல்கலைழகத்தின் இரண்டு ஒப்பந்தக் கொலையாளிகளை போலீசார் கைது செய்தனர்.
கடந்த 2023, அக்டோபர் 3 அன்று பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த இரண்டு தனித்தனி துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் மூன்று பேர் காயமடைந்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் வெளியாட்கள் என்றும், அவர்கள் சில மாணவர்களைத் தாக்க வளாகத்துக்குள் நுழைந்ததாகவும் காவல்துறை கூறியது.
இந்த வழக்கில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 2023 மே மாதத்தில் அலிகர் பல்கலைக்கழக நிர்வாகம் இரண்டு இளங்கலை மாணவர்களை இடைநீக்கம் செய்திருந்தது. இதன் பின்னணியில் அவ்விருவரும் கை துப்பாக்கிகள், கத்திகள் மற்றும் பிற கொடிய ஆயுதங்களை வைத்திருந்ததாகப் புகார் இருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT