Published : 02 Mar 2025 09:21 AM
Last Updated : 02 Mar 2025 09:21 AM

மக்கள் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்: எம்எல்ஏக்களுக்கு சந்திரபாபு அறிவுரை

சித்தூர்: ஆந்திர மாநிலம், சித்தூர் அருகே உள்ள கங்காதரநெல்லூர் பகுதியில் முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு பயனாளிகள் சிலருக்கு மாத உதவித் தொகையை நேரில் வழங்கினார். பிறகு அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘பிரஜா வேதிகா’ எனும் நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டு பேசியதாவது:

கடந்த 5 ஆண்டுகளாக ஜெகன்மோகன் ஆட்சியில் மிகுந்த சிரமத்துக்கு ஆளான மக்கள் இம்முறை நமது கூட்டணி வாக்களித்துள்ளனர். எனவே தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏக்கள் மக்களின் நம்பிக்கையை வீணடிக்காமல் அவர்களின் பிரச்சினைகளை அறிந்து செயல்பட வேண்டும். மாறாக ஏசி அறைகளில் உட்கார்ந்திருந்தால் மக்களின் பிரச்சினைகள் அறிய முடியாது.

ஆந்திராவில் முதியோர், மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 64 லட்சம் பயனாளிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதியே அவர்களின் வீடுகளுக்கே சென்று உதவித் தொகையை வழங்கி வருகிறோம். மாற்றுத் திறனாளிகளுக்கான மாத உதவித்தொகையை ரூ.6 ஆயிரமாக உயர்த்தினோம். சிறுநீரகம் செயலிழப்பு உள்ளிட்ட வியாதிகளால் அவதிப்படுவோருக்கு மாதம் ரூ.10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை நிதியுதவி அளித்து வருகிறோம்.

இதுபோன்ற மாத உதவித்தொகைக்கு மட்டும் எங்கள் அரசு ரூ.33 ஆயிரம் கோடி செலவிடுகிறது. போலவரம் அணை கட்டும் பணிகளும் தலைநகர் அமராவதி கட்டுமானப் பணிகளும் விரைவாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x