Last Updated : 02 Mar, 2025 12:36 AM

 

Published : 02 Mar 2025 12:36 AM
Last Updated : 02 Mar 2025 12:36 AM

கும்பமேளா நடைபெற்ற 45 நாட்களில் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு 1,000 விஐபிகள் வருகை

புதுடெல்லி: கும்பமேளா நடைபெற்ற 45 நாட்களில் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு சுமார் 1,000 முக்கியப் பிரமுகர்கள் (விஐபிகள்) வருகை புரிந்துள்ளனர். 7 மாநில முதல்வர்கள், ஆளுநர்கள், 190 நீதிபதிகள் என இவர்களின் பட்டியல் நீள்கிறது.

உத்தரபிரதேசம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா ஜனவரி 13-ல் தொடங்கி 45 நாட்கள் நடைபெற்றது. இந்த 45 நாட்களில் கும்பமேளாவுக்கு வருகை புரிந்த 953 விஐபிகள் அருகிலுள்ள வாராணசியின் காசி விஸ்வநாதர் கோயிலுக்கும் வந்தனர்.

இது தொடர்பான விவரம் வாராணசி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பதிவாகியுள்ளது. இதன்படி உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் இங்கு பலமுறை வந்து சென்றுள்ளார். இவர் தவிர மகாராஷ்டிரா, ஒடிசா உள்ளிட்ட 7 மாநில முதல்வர்கள், பல்வேறு துணை முதல்வர்கள், நாகாலாந்தின் எல்.கணேசன், தமிழ்நாட்டின் ஆர்.என்.ரவி உள்ளிட்ட மாநில ஆளுநர்கள், நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், தர்மேந்திர பிரதான் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களின் 145 அமைச்சர்கள், 213 வெளிநாட்டுப் பிரதிநிதிகளும் காசி விஸ்வநாதரை தரிசனம் செய்தனர்.

இவர்களை தவிர உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் 190 பேரும் மத்திய, மாநில அரசுகளின் 389 உயரதிகாரிகளும் பல்வேறு மொழி திரைப்பட பிரபலங்களும் விஸ்வநாதரை தரிசனம் செய்தனர்.

இந்த 45 நாட்களில், பொதுமக்கள் சுமார் 20 கி.மீ. தொலைவு வரிசையில் தரிசனம் முடித்தனர். ஜனவரி தொடக்கத்தில் இருந்த குளிரையும் மக்கள் பொருட்படுத்தவில்லை.

இவர்களுக்கு இடையே, தமிழகத்திலிருந்து காசி தமிழ்ச் சங்கமத்திற்கு வந்த சுமார் 2400 பேருக்கும் விஸ்வநாதரின் தரிசனம் செய்து வைக்கப்பட்டது.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டிடம் வாராணசி மாவட்ட ஆட்சியர் எஸ்.ராஜலிங்கம் கூறும்போது, "இந்த 45 நாட்களில் இதுவரை இல்லாத வகையில் சுமார் 6 லட்சம் பக்தர்கள் விஸ்வநாதர் கோயிலுக்கு வருகை புரிந்தனர். இத்துடன் இங்கு மகா சிவராத்திரி நாளில் பெரிய ஊர்வலத்தையும் துறவிகளின் அகாடாக்கள் நடத்தின. இவை அனைத்தையும் சமாளிப்பது பெரும் சவாலாக இருந்தது. முதல்வர்கள், ஆளுநர்கள் உள்ளிட்ட விஐபிகளை பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் கங்கையில் படகு மூலம் அழைத்துவந்து தரிசனத்தை முடித்தோம்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x